செய்திகள்

இந்தியாவைத் தோற்கடித்ததற்குக் காரணம் இதுதான்: தெ.ஆ. வீரர் டுசென்

10th Jun 2022 04:32 PM

ADVERTISEMENT

 

தில்லி டி20 ஆட்டத்தில் இந்தியாவைத் தோற்கடித்ததற்கு ஐபிஎல் போட்டி முக்கியக் காரணம் எனத் தென்னாப்பிரிக்க பேட்டர் வான் டர் டுசென் கூறியுள்ளார்.

தில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 76 ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 36 ரன்களும் பாண்டியா 12 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் எடுத்தார்கள். தென்னாப்பிரிக்க அணி, 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 11-வது ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துத் தடுமாறிக் கொண்டிருந்தது தென்னாப்பிரிக்க அணி. ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் மில்லரும் வாண் டர் டுசெனும் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்கள். டுசென் 46 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 75 ரன்களும் மில்லர் 31 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தார்கள். ஆட்ட நாயகனாக மில்லர் தேர்வானார்.

தென்னாப்பிரிக்க அணியின் நடுவரிசை பேட்டர் வான் டர் டுசென், ஆட்டத்துக்குப் பிறகு கூறியதாவது:

ADVERTISEMENT

ஏராளமான ஐபிஎல் ஆட்டங்களை நான் பார்த்துள்ளேன். அதிக ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் என்ன செய்வார்கள் என்பது குறித்து ஓரளவு அறிந்து வைத்திருந்தேன். ஐபிஎல் 2022 போட்டிக்காக இரு மாதங்கள் இங்கு இருந்துள்ளேன். இந்த வெயில், இந்தச் சூழல் எனக்குப் பழக்கமானவை தான். எனக்கு மட்டுமல்ல, ஏராளமான தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடியுள்ளார்கள். அதனால் முதல் ஆட்டத்திலேயே சூழலை அறிந்துகொண்டு விளையாட முடிந்தது என்றார். 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்று 3 ஆட்டங்களில் விளையாடினார் 33 வயது டுசென். 

ADVERTISEMENT
ADVERTISEMENT