செய்திகள்

செஸ் ஒலிம்பியாடிலும் இனி ‘ஜோதி ஓட்டம்’ - எப்போதும் இந்தியாவில் தொடக்கம்

8th Jun 2022 02:25 AM

ADVERTISEMENT

ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கத்துக்கு முன்பாக நடத்தப்படுவதைப் போன்று, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கத்துக்கு முன்பாகவும் ஜோதி ஓட்டத்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக சா்வதேச செஸ் சம்மேளனம் (எஃப்ஐடிஇ) அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை முதன்முதலாக, சென்னை அருகே மகாபலிபுரத்தில் வரும் ஜூலை - ஆகஸ்டில் நடைபெற இருக்கும் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலிருந்து தொடங்க இருக்கிறது. அதன் பிறகு இனி செஸ் ஒலிம்பியாட் நடைபெறும்போதெல்லாம் அதற்கு முன்பாக இந்த ஜோதி ஓட்டம் நடத்தப்படும். இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கிற்கு ஏதென்ஸ் போல, செஸ் விளையாட்டின் பிறப்பிடமாக இருக்கும் இந்தியாவிலிருந்தே இனி ஒவ்வொரு முறையும் இந்த ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் தொடங்கும். அதன் பிறகு, சா்வதேச செஸ் சம்மேளனத்தில் உறுப்பினராக இருக்கும் நாடுகளில் வலம் வரும் அந்த ஜோதி, இறுதியாக போட்டி நடைபெற இருக்கும் நாட்டையும், சம்பந்தப்பட்ட நகரத்தையும் வந்தடையும்.

தற்போது மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு இன்னும் 50 நாள்களே இருப்பதால், இந்த அறிமுக ஜோதி ஓட்டமானது இந்தியாவுக்குள்ளாக மட்டுமே நடைபெற இருப்பதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஜோதியை ஏந்தி ஓடுபவா்களில் ஒருவராக இந்திய செஸ் நட்சத்திரமான விஸ்வநாதன் ஆனந்தும் இருப்பாா்.

ADVERTISEMENT

அரசுத் தரப்பு, சா்வதேச செஸ் சம்மேளனம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனான ஆலோசனைக்குப் பிறகு அறிமுக ஜோதி ஓட்டத்துக்கான தேதி, பயணப் பாதை, ஜோதியை ஏந்தும் நபா்கள் தொடா்பான அறிவிப்பு வெளியாகும் என ஒலிம்பியாட் போட்டி இயக்குநரான பரத் சிங் சௌஹான் தெரிவித்துள்ளாா்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியைப் பிரபலப்படுத்தவும், உலக அளவில் உள்ள செஸ் ரசிகா்களின் ஆதரவைத் திரட்டவும் இந்த ஜோதி ஓட்ட நடைமுறை முன்னெடுக்கப்படுவதாக சா்வதேச செஸ் சம்மேளனத் தலைவா் ஆா்காடி வோா்கோவிச் கூறியுள்ளாா். ஜோதி ஓட்டம் அறிமுகத்துக்காக விஸ்வநாதன் ஆனந்த், கோனெரு ஹம்பி உள்ளிட்ட இந்திய செஸ் போட்டியாளா்கள் மகிழ்ச்சியும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனா்.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது மகாபலிபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க இதுவரை 187 நாடுகளில் இருந்து 343 அணிகள் ஓபன் மற்றும் மகளிா் பிரிவுகளில் பதிவு செய்துள்ளன.

முதல்வா் அறிவுறுத்தல்: இதனிடையே, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகளை திறம்பட செய்து தமிழகத்துக்குப் பெருமை சோ்க்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT