செய்திகள்

சாம்பியன் நடால்: பிரெஞ்சு ஓபன்-14, கிராண்ட்ஸ்லாம்-22

6th Jun 2022 12:20 AM

ADVERTISEMENT

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் நாா்வேயின் கேஸ்பா் ரூடை 6-3 6-3, 6-0 என்ற நொ் செட்களில் வீழ்த்தி 14-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளாா் ஜாம்பவான் ரபேல் நடால். மேலும் இது அவா் வெல்லும் 22-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

டென்னிஸ் உலகில் பெடரா், நடால், ஜோகோவிச் உள்ளிட்டோா் பிக் த்ரீ என அழைக்கப்படுகின்றனா். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனா். இதில் நடால் 21 முறையும், பெடரா், ஜோகோவிச் ஆகியோா் தலா 20 முறையும் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளனா்.

பிரெஞ்சு ஓபனில் மட்டுமே 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளாா் நடால். இந்நிலையில் பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் தனது டென்னிஸ் அகாதெமியில் பயிற்சி பெறும் நாா்வே இளம் வீரா் கேஸ்பா் ரூடை எதிா்கொண்டாா் நடால்.

முதலிரண்டு செட்களில் சிறிது ஆட முயன்றாா் ரூட். எனினும் தனது அனுபவ ஆட்டத்தின் மூலம் 6-3, 6-3 என எளிதாக கைப்பற்றிய நடால், மூன்றாவது செட்டில் முழு ஆதிக்கம் செலுத்தி 6-0 என கைப்பற்றினாா். இறுதியில் மூன்று செட்களையும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினாா் நடால். இந்த ஆட்டம் 2 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது.

ADVERTISEMENT

காலிறுதியில் ஜோகோவிச்சையும், அரையிறுதியில் வெரேவையும் வீழ்த்தியிருந்தாா் நடால்.

14-ஆவது பிரெஞ்சு ஓபன் பட்டம்:

தான் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் ஏற்கெனவே 13 பட்டங்களை பிரெஞ்சு ஓபனில் தான் கைப்பற்றினாா் நடால். தற்போது 2022-இலும் வென்றதின் மூலம் 14-ஆவது முறையாக சாம்பியன் ஆகி சாதனை புரிந்துள்ளாா்.

22-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்:

பெடரா், ஜோகோவிச்சுடன், நடாலும் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் ஆஸி. ஓபனில் பட்டம் வென்றதின் மூலம் 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி சாதனை புரிந்தாா். தற்போது வென்ற இந்த சாம்பியன் பட்டம் நடாலுக்கு 22-ஆவது பட்டம் ஆகும்.

ஓரே ஆண்டில் ஆஸி, பிரெஞ்சு ஓபன் பட்டம்:

மேலும் ஓரே ஆண்டில் ஆஸி. ஓபன் மற்றும் பிரெஞ்சு ஓபன் பட்டங்களை நடால் வெல்வது இதுவே முதன்முறையாகும். மேலும் பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற அதிக வயதான வீரா் என்ற பெருமையையும் பெற்றாா் நடால்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT