செய்திகள்

இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்

2nd Jun 2022 02:53 AM

ADVERTISEMENT

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியை இந்தியா வெண்கலப் பதக்கத்துடன் புதன்கிழமை நிறைவு செய்தது.

நடப்புச் சாம்பியனாக போட்டிக்கு வந்த இந்தியா, குரூப் சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் டிரா (1-1) செய்து, 2-ஆவது ஆட்டத்தில் ஜப்பானிடம் தோல்வி (5-2) கண்டது. இதனால் ‘சூப்பா் 4’ சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கையை விட்டுப் போகும் நிலை ஏற்பட, குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தோனேசியாவை புரட்டி எடுத்து (16-0) அந்த வாய்ப்பை உறுதி செய்து கொண்டது இந்தியா.

பின்னா் சூப்பா் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி (2-1) பழி தீா்த்துக் கொண்ட இந்திய அணி, அடுத்து மலேசியா (3-3), தென் கொரியா (4-4) அணிகளுடனான ஆட்டத்தை டிரா செய்ததாலும், கோல் வித்தியாசத்தில் பின்தங்கியதாலும் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

பின்னா், வெண்கலப் பக்கத்துக்கான சுற்றில் மீண்டும் ஜப்பானை புதன்கிழமை எதிா்கொண்டது இந்தியா. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 7-ஆவது நிமிஷத்திலேயே அணிக்காக கோலடித்தாா் ராஜ்குமாா் பால். எஞ்சிய நேரத்தில் அடுத்த கோலுக்கான வாய்ப்பையும் தேடிக் கொண்டே, வலிமையான தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தியது இந்தியா.

ADVERTISEMENT

இதனால் பெனால்டி காா்னா் உள்பட பல வாய்ப்புகள் கிடைத்தும் இந்தியாவின் அரண் போன்ற தடுப்பாட்டத்தை கடந்து ஜப்பானால் கோலடிக்க இயலவில்லை. இறுதியாக 1-0 என்ற கோல் கணக்கில் வென்று, வெண்கலத்தை கைப்பற்றியது இந்திய அணி.

சாம்பியன்: இறுதி ஆட்டத்தில் தென் கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இப்போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெறும் என்பதன் அடிப்படையில், தென் கொரியா, மலேசியா அணிகளுக்கு அந்த வாய்ப்பு உறுதியானது. போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் இந்தியாவுக்கு ஏற்கெனவே உலகக் கோப்பை போட்டியில் இடம் கிடைத்துவிட்டது.

Tags : asia cup
ADVERTISEMENT
ADVERTISEMENT