செய்திகள்

2-வது டி20: இந்திய அணியில் கோலி, ரிஷப் பந்துக்கு இடமுண்டா?

ச. ந. கண்ணன்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து 2-வது டி20 ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய அணி பற்றி பல கேள்விகள் எழுந்துள்ளன. முக்கியமாக ரிஷப் பந்துக்கு இந்திய அணியில் இடமுண்டா?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

செளதாம்ப்டனில் நடைபெற்ற பகலிரவு ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடினார்கள். ரோஹித் சர்மா 24, ஹூடா 33, சூர்யகுமார் யாதவ் 39 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியாவும் அபாரமாக பேட்டிங் செய்து 33 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. ஜார்டன், மொயீன் அலி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து கேப்டன் பட்லரை முதல் பந்திலேயே அற்புதமான பந்தால் போல்ட் செய்தார் புவனேஸ்வர் குமார். இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாண்டியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது.

2-வது டி20 ஆட்டம் பிர்மிங்கமில் நாளை நடைபெறுகிறது. இந்திய நேரம் இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. 

இந்திய அணி வீரர்கள் பலர் முதல் டி20 ஆட்டத்தில் அபாரமாக விளையாடியிருப்பது ரோஹித் சர்மா, டிராவிடுக்குப் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

5-வது டெஸ்டில் விளையாடிய விராட் கோலி, பும்ரா, ரிஷப் பந்த், ஜடேஜா, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் முதல் டி20 ஆட்டத்தில் இடம்பெறவில்லை. இவர்கள் அனைவரும் மீதமுள்ள இரு டி20 ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். முதல் டி20 ஆட்டத்தில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் அடுத்த இரு ஆட்டங்களுக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.

முதல் டி20 ஆட்டத்தில் இந்திய பேட்டர்களின் ஸ்டிரைக் ரேட். ரோஹித் சர்மா - 171.42, தீபக் ஹூடா - 194.11, சூர்யகுமார் யாதவ் - 205.26, பாண்டியா - 154.54, அக்‌ஷர் படேல் - 141.66, தினேஷ் கார்த்திக் - 157.14. இஷான் கிஷன் 10 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ரிஷப் பந்த்

2-வது டி20 ஆட்டத்தில் கோலி, ரிஷப் பந்த், ஜடேஜா, பும்ரா ஆகியோரைச் சேர்ப்பதாக இருந்தால் அணியிலிருந்து யாரை நீக்குவது?

இவர்கள் நால்வரும் வழக்கமாக எப்போதும் இந்திய டி20 அணியில் இடம்பெறுவார்கள். இந்தமுறை தான் சிக்கலாகி விட்டது. 

பும்ராவுக்குப் பிரச்னையில்லை. அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக விளையாடுவார். ஆனால் முதல் டி20யில் அர்ஷ்தீப் சிங் அபாரமாகப் பந்துவீசி 3.3 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பலருடைய பாராட்டுகளையும் பெற்றார். இவருக்கு இன்னொரு வாய்ப்பு இத்தொடரில் இல்லை என்பது பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. 

கோலி, ரிஷப் பந்த், ஜடேஜா விளையாட வேண்டுமென்றால் யாரை நீக்குவது?

இஷான் கிஷன் சரியாக விளையாடாததால் அவரை நீக்கி கோலியைச் சேர்த்துக்கொள்ளலாம். 

ரிஷப் பந்த், ஜடேஜா?

அக்‌ஷர் படேலுக்குப் பதிலாக ஜடேஜா உள்ளே நுழைந்துவிடுவார். முதல் டி20யில் அக்‌ஷர் படேல் பேட்டிங்கில் ஓரளவுக்குப் பங்களித்தார். பந்துவீச்சு சரியாக அமையவில்லை. இதனால் ஜடேஜா அந்த வாய்ப்பைப் பெற்று விடுவார்.

கடைசியாக இருப்பவர், ரிஷப் பந்த். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அவர் சரியாக விளையாடவில்லை. இதுவரை 48 டி20 ஆட்டங்களில் விளையாடியவரின் ஸ்டிரைக் ரேட் - 123.91. ஆனால் 5-வது டெஸ்டில் ஒரு சதமும் அரை சதமும் எடுத்தவர். விக்கெட் கீப்பர், அணியின் ஒரே இடக்கை பேட்டர் என்கிற கூடுதல் அம்சங்கள் வேறு. இவரை எப்படி அணியில் சேர்க்காமல் இருக்க முடியும்?

தீபக் ஹூடா கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் பொன்னாக்கி வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் பவர்பிளேயில் அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை அளித்தார். இவரை எப்படி அணியிலிருந்து நீக்க முடியும்?

சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள். இப்படி விளையாடியவரையும் எப்படி நீக்க முடியும்?

இத்தனைக்கும் மத்தியில் ஷ்ரேயஸ் ஐயரை வேறு அணியில் சேர்க்க முடியாத நிலைமை உள்ளது. 

தற்போதைய நிலையில் ரிஷப் பந்துக்கு அணியில் இடமில்லை. 

ஆனால் தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ் என இருவரில் ஒருவருக்குத்தான் இடம் என டிராவிடும் ரோஹித்தும் முடிவெடுத்தால் ரிஷப் பந்துக்கு அணியில் இடம் கிடைக்கும். ஆனால் முதல் டி20யில் சிறப்பாக விளையாடியவர்களை அணியிலிருந்து நீக்குவதும் நியாயமில்லையே. நிறைய திறமைசாலிகள் உள்ள அணியில் எப்போதும் இந்தச் சிக்கல் இருக்கும். ஒருவகையில் இத்தகைய குழப்பங்கள் இந்திய அணிக்கு நன்மையையே தரும் என்பதுதான் இதிலுள்ள ஒரு நல்ல விஷயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

SCROLL FOR NEXT