செய்திகள்

கருணாநிதி அளித்த பரிசுத்தொகை, காக்கா முட்டை சிறுவர்களுக்குப் பாராட்டு: தோனி பற்றிய சுவையான தகவல்கள்!

7th Jul 2022 11:56 AM | எழில்

ADVERTISEMENT

 

பிரபல வீரர் எம்.எஸ். தோனி, தனது 41-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.

தோனி பற்றிய சில சுவையான தகவல்கள், பரபரப்புச் சம்பவங்களைப் பார்க்கலாம்.

* தோனியின் புகழ்பெற்ற ஹெலிகாப்டர் ஷாட், அவருடைய கண்டுபிடிப்பு அல்ல. பள்ளிக் காலத்தில் டென்னிஸ் பந்தைக் கொண்டு விளையாடிய ஒரு போட்டியில் தன்னுடைய நண்பன் சந்தோஷ் லால் அந்த ஷாட்டை விளையாடியதைப் பார்த்தார் தோனி. அந்த ஷாட்டின் வசீகரத்தால் ஈர்க்கப்பட்டு அவரிடமிருந்து கற்றுக்கொண்டார்.

ADVERTISEMENT

* தோனியை கேப்டன் ஆக்குங்கள் என்று இந்திய அணி நிர்வாகத்துக்குப் பரிந்துரை செய்தவர் சச்சின் டெண்டுல்கர். 

* சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஆட வந்த புதிதில் நீண்ட முடியை வைத்திருப்பார் தோனி. பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் இதற்கு ஊக்கமாக இருந்துள்ளார். 

* தனக்குக் குழந்தை பிறந்த தருணத்தில் ஆஸ்திரேலியாவில் 2015 உலகக் கோப்பை தொடரில் விளையாடிக் கொண்டிருந்தார் தோனி. குழந்தையை பிரிந்திருந்தது குறித்து கேட்டபோது, எனது மகள் பிறந்த போது நான் இந்தியாவில் இல்லை. அதனால் அவளை அப்போது என்னால் பார்க்க இயலவில்லை. அந்த தருணம் மிகவும் கடினமாக இருந்தது. குழந்தைகள் உதிர்க்கும் புன்னகையில் வாழ்க்கையே மாறிவிடுகிறது. நான் என்னுடைய நாட்டிற்காக விளையாடுகிறேன் அல்லது சென்னை போன்ற சிறந்த அணிக்காக விளையாடுகிறேன் என்பது பற்றியெல்லாம் எனது மகளுக்கு தெரியாது. அவளுக்கு இப்போது அழ மட்டுமே தெரியும். இதுவும் சிறந்த உணர்வைத் தருகிறது என்றார்.

இதுபற்றி சாக்‌ஷியிடம் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்: மகள் ஸிவா பிறந்த போது தோனி அருகில் இல்லாதது பற்றி கேட்கிறீர்கள். உலகக் கோப்பையின்போது மகள் பிறந்தாள். அச்சமயத்தில் மகளைப் பார்ப்பதற்காக இந்தியாவுக்குத் திரும்பி வருவது சரியாக இருக்காது. தோனி பார்க்க வரவில்லையா என மருத்துவமனையில் பலரும் கேட்டார்கள். எனக்கு அதனால் எவ்வித பிரச்னையும் இல்லை. அவருக்கு கிரிக்கெட் முக்கியம், எனக்கு அவர் முக்கியம். உங்களுக்குக் காதல் இருக்கும்போது அதைத் தியாகம் எனக் கூறக்கூடாது. அந்த நபர் மீது காதல் இருப்பதால் அதைச் செய்கிறீர்கள் என்றார். 

* ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த சிறுவர்கள் ரமேஷ், விக்னேஷ் ஆகிய இருவரும் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் தோனியைச் சந்தித்தார்கள். இருவருக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம், தோனியின் ரசிகர்கள் என்பதால் தேசிய விருது வாங்கியதற்கான பாராட்டாக தோனியுடனான சந்திப்பை ஏற்பாடு செய்தது படத்தை வெளியிட்ட ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம். இயக்குநர் மணிகண்டனுடன் சேர்ந்து மும்பை சென்ற இரண்டு சிறுவர்களும் டிஒய் படேல் மைதானத்தில் தோனியைச் சந்தித்தார்கள். படத்தின் சில காட்சிகளையும் டிரையிலரையும் முதலில் பார்த்தார் தோனி. சாதாரண குடும்பச் சூழலில் இருந்து தேசிய விருது வரை முன்னேறியுள்ள இரண்டு சிறுவர்களையும் கட்டிப்பிடித்துப் பாராட்டினார். ஐபிஎல் ஆடுவதற்காக அடிக்கடி சென்னை வருவதால் சப்-டைட்டில் உள்ள தமிழ்ப் படங்களைப் பார்ப்பது வழக்கம் என்று இயக்குநர் மணிகண்டனிடம் தெரிவித்தார் தோனி.

தங்கள் கனவு நாயகன் தோனியைச் சந்தித்தது பற்றி இரு சிறுவர்களும் ஒரு பேட்டியில் கூறியதாவது:

தோனியைச் சந்தித்தது சூப்பரா இருந்துச்சு. எங்களிடம் நல்லாப் பேசினார். கட்டிப் பிடிச்சுப் பாராட்டினார். முதல்ல பேசும்போது தயக்கமா இருந்துச்சு. ஆனா, அவர் எங்ககிட்ட நல்லா பேசினதால சகஜமாயிட்டோம். பெரிய கிரிக்கெட் வீரர் மாதிரி நடந்துக்கலை. வாழ்க்கையில நினைச்சதை சாதிக்கணும்னா எந்தமாதிரி வாழணும்னு ஆலோசனை எல்லாம் கொடுத்தார் என்றனர். 

* தோனியை சக வீரர்கள் எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பது அஸ்வினின் இந்தப் பேட்டியில் தெரியும்.

2015-ல் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது தோனிக்கு ஆதரவாக அஸ்வின் கூறியதாவது:

தலைவனுக்குப் பின்னால் இப்போது ஆதரவாக இல்லாமல், வேறு எப்போது ஆதரவாக இருப்பது? இந்த அணியையும் ஒரு ராணுவமாக கருதுகிறேன். உங்கள் தலைவனுக்குப் பின்னால் நீங்கள் செல்லவில்லை என்றால், கண்டிப்பாக உங்களுக்கு பாதிப்பு நிச்சயம். களத்தில் எனது கேப்டன் என்னை சாகச் சொன்னால், நான் அதையும் செய்வேன். தோனி, நட்சத்திர வீரர்களில் ஒருவர். ஒட்டுமொத்த அணியின் செயல்பாட்டுக்காக அவரை குறைகூற இயலாது என்று அஸ்வின் கூறினார்.

தோனியால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டேனா?: சேவாக் பதில்

2015-ல் தனது 37-ஆவது பிறந்த தினத்தன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் வீரேந்திர சேவாக்.

தோனியால் அணியிலிருந்து நீக்கப்பட்டீர்களா என்கிற கேள்விக்கு சேவாக் அளித்த பதில்:

எனக்கும் தோனிக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. இருவரும் ஒரே ஹோட்டலில்தான் தங்குவோம். தோனியின் தலைமையில் நான் ஆடி இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது. தோனியுடன் எனக்குப் பிரச்னை ஏற்பட்டிருந்தால் நான் அணியிலிருந்து முன்பே நீக்கப்பட்டிருப்பேன். இந்திய அணியிலிருந்து நான் நீக்கப்பட்டதற்கு தோனி காரணம் என கங்குலி சொல்லியிருப்பது தவறு. தோனியால் நான் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்க மாட்டேன். அவர் நல்ல இதயம் கொண்டவர். என்னைப் போன்ற மூத்த வீரர்கள் அவரை மதித்தோம். அவர் முதலில் கேப்டன் ஆனபோது எல்லா மூத்த வீரர்களும் அவருக்குத் தக்க ஆலோசனைகளை வழங்கினோம் என்றார்.

* 2017-ல் விஜய் ஹசாரே போட்டிக்காக ஜார்கண்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தோனி, 13 வருடங்களுக்குப் பிறகு ரயிலில் பயணம் செய்தார். 

கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்வதற்காக ராஞ்சியிலிருந்து ஹவுரா ரயில் நிலையம் வரை ரயிலில் தன் அணி வீரர்களுடன் பயணித்துள்ளார் தோனி. 

வழக்கமாக கொல்கத்தா செல்வதற்காக விமானத்தில்தான் செல்வோம். ஆனால் இம்முறை ரயிலில் செல்ல விருப்பப்பட்டார் தோனி. இதற்காக செவ்வாய் இரவு கிரியா யோகா விரைவு ரயில் வண்டியில் இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் அணி வீரர்களுடன் பயணம் செய்தார் தோனி என்று அணியின் மேலாளர் பி.எ. சிங் கூறினார். 

தென்கிழக்கு ரயில்வேயின் முன்னாள் ஊழியரான தோனி காலை 2 மணி வரை வீரர்களுடன் பேசிக்கொண்டு வந்துள்ளார். தன் வாழ்க்கையில் சந்தித்த பல அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். தோனி ரயிலில் பயணித்ததை ஆச்சர்யத்துடன் பார்த்த ரயில்வே ஊழியர்களும் பயணிகளும் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கியதோடு செல்பி புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்கள். தோனி ரயிலில் பயணித்தபோது அவருக்கு சிறப்பு காவல்துறை பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. 

தோனியின் மகத்தான சாதனைக்குப் பரிசுத்தொகை அளித்து ஊக்கப்படுத்திய கருணாநிதி!

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சச்சினின் பேட்டிங் பிடிக்கும் என்றாலும் தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரராக அவர் சொன்னது - தோனியின் பெயரை. 

எனக்குப் பிடித்த 'கிரிக்கெட்' வீரர்கள் முன்பு 'கபில் தேவ்',  இப்போது 'தோனி' என்று 2013 செப்டம்பரில் ஒரு கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார் கருணாநிதி. 

இந்திய அணி 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது, தோனி தலைமையிலான இந்திய அணிக்கு ரூ. 3 கோடி பரிசுத்தொகை அளித்தார் கருணாநிதி. தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வினுக்கு ரூ. 1 கோடி அளித்து ஊக்கப்படுத்தினார்.

ஓய்வு அறிவிப்பா? நடுவரிடமிருந்து பந்தை வாங்கிச் சென்றதால் ரசிகர்களிடையே பரபரப்பு!

2018 ஜூலையில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. அந்த அணியின் ஜோ ரூட், கேப்டன் மோர்கன் ஆகியோர் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் முறையே 100, 88 ரன்களை எடுத்தனர். முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டை இழந்து 256 ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 71 ரன்களை குவித்தார். இங்கிலாந்தின் டேவிட் வில்லி, அடில் ரஷீத் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றவுடன் தோனி செய்த ஒரு காரியம், கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தின. 

இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அனைத்து வீரர்களும் பெவிலியன் நோக்கித் திரும்பியபோது தோனி மட்டும் நடுவர் அருகே சென்று அன்றைய ஆட்டத்தின் பந்தை வாங்கிக்கொண்டார். 

இது தோனியின் வழக்கமான செயல் அல்ல. இந்திய அணி வெற்றி பெறுகிற தருணங்களில் மட்டும் ஒரு ஸ்டம்பை எடுத்துக்கொள்வது தோனியின் வழக்கமாக உள்ளது. மற்றபடி தோல்வி பெற்ற ஓர் ஆட்டத்தின் முடிவில் புதிய வழக்கமாக நடுவரிடமிருந்து பந்தை வாங்கியது சமூகவலைத்தளங்களில் விவாதத்தை உருவாக்கியது. 

2014-ல் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தின்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போகும் முன்பு தோனி இதேபோல ஒரு செயலைச் செய்தார். அதுதான் பயத்துக்குக் காரணமாக அமைந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் ஸ்டம்பை எடுத்துவைத்துக்கொண்டார் தோனி. இது இந்திய அணி வீரர்களுக்குப் புதிராக இருந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் தோனி. அதேபோல தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் தோனி விலக முடிவெடுத்துள்ளார், அதனால்தான் பந்தை நடுவரிடமிருந்து வாங்கியுள்ளார் எனக் கடந்த இரு நாள்களாகச் சமூகவலைத்தளங்களில் பரபரப்பு உருவானது. 

தோனி ஒய்வுபெறப்போவதாக உருவான பரபரப்பு குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

நடுவரிடமிருந்து தோனி பந்தை வாங்கியதற்குக் காரணம் - அந்தப் பந்தின் தன்மை குறித்து பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருணிடம் விளக்குவதற்காகத்தான். பந்து எந்தளவுக்குத் தேய்மானம் கண்டுள்ளது, பந்தின் தன்மையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன என்பதை விளக்குவதற்காகப் பந்தை வாங்கிச் சென்றார் தோனி. இதை வைத்து தோனி ஓய்வு பெறப்போகிறார் என்று கதை கட்டுவது முட்டாள்தனம். தோனி எங்கேயும் சென்றுவிடமாட்டார். ஆனால் இதை வைத்து உருவான அமளிகள் எல்லாம் அபத்தங்கள் என்று பேட்டியளித்தார். 

துப்பாக்கி உரிமம் கோரிய சாக்‌ஷி!

2006-ம் ஆண்டு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி உரிமத்துக்கு விண்ணப்பித்தார் தோனி. இதையடுத்து அவருக்குத் துப்பாக்கி உரிமம், 2010-ம் ஆண்டு வழங்கப்பட்டது. 2018-ல் துப்பாக்கி உரிமம் கோரி ராஞ்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு மனு அளித்தார் தோனியின் மனைவியான சாக்‌ஷி.

தன்னுடைய மனுவில் அவர் கூறியதாவது: நான் வீட்டில் பெரும்பாலும் தனிமையில் உள்ளேன். தனிப்பட்ட வேலைகளுக்காக வெளியேயும் செல்லவேண்டியுள்ளது. இதனால் என் உயிருக்கு ஆபத்து நேர வாய்ப்புள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு எனக்குத் துப்பாக்கி உரிமம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 0.32 ரக ரிவால்வர் அல்லது சிறிய ரக பிஸ்டல் வைத்துக்கொள்ள அவர் அனுமதி கோரினார்.

மைதானத்தில் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதம் செய்த தோனி

2019 ஐபிஎல் போட்டியில், மைதானத்தில் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதம் செய்த சென்னை கேப்டன் தோனிக்கு ஆட்ட ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. 

ராஜஸ்தானுடன் நடைபெற்ற ஆட்டத்தில் ஜோஸ்பட்லர் நோபால் வீசியதாக எழுந்த சர்ச்சையை அடுத்து  கோபத்தில் மைதானத்தின் உள்ளே நுழைந்த தோனி நடுவர் உல்ஹாஸ் காந்தே, புருஸ் ஆக்ஸன்போர்டிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நோபால் தொடர்பாக 2 நடுவர்களிடம் வாக்குவாதம்  மேற்கொண்டார்.

இது ஐபிஎல் விதி 2.20 பிரிவின் கீழ் விதிமீறல்  என ஆட்ட நடுவர் அறிக்கை அளித்தார். தோனியும் தனது தவறை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு ஆட்ட ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தோனியின் செயல்பாடு குறித்து விசாரிக்கப்பட்டாலும், அவர் நடுவர்களிடம் தெளிவு பெறுவதற்காக தான் மைதானத்தில் நுழைந்தார். பந்துவீச்சின் போது நடுவர் நோபால் சைகை காண்பித்தார். ஆனால் அது இல்லை எனத் தெரிந்ததால், இந்த குழப்பம் ஏற்பட்டது. இதனால் தெளிவு பெறுவதற்காக தோனி சென்றார். இது தவறா சரியா என்பதை நான் கூற முடியாது என்று சிஎஸ்கேவின் பயிற்சியாளர் ஃபிளெமிங். 

ராணுவ முத்திரை கொண்ட தோனி கையுறை

2019 உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய விக்கெட் கீப்பர் தோனி, ராணுவ முத்திரை போன்ற அடையாளத்துடன் கூடிய பச்சை நிற கையுறைகளை அணிந்திருந்தார். தோனி, பிராந்திய படையில் கெளரவ அந்தஸ்துள்ள லெப்.கலோனல் பதவியிலும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த கையுறை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

பாகிஸ்தான் தரப்பும் இப்பிரச்னை தொடர்பாக தனது ஆட்சேபத்தை ஐசிசியிடம் வெளிப்படுத்தியது. இதையடுத்து தோனியின் கையுறையை அகற்றும்படி ஐசிசி கூறியது. 
 
ஆனால், தோனி அதே கையுறையை உலகக் கோப்பை போட்டியில் அணிவார். அது ராணுவ அடையாளம் இல்லை. இதற்காக ஐசிசி.யிடம் முறையான அனுமதியை பிசிசிஐ கோரியுள்ளது என அதன் சிஓஏ வினோத் ராய் கூறினார். ஐசிசி விதிமுறைகளின்படி வர்த்தக, மத, ராணுவ அடையாளங்களை வீரர்கள் அணியக்கூடாது. எனவே ஐசிசி இதற்கு அனுமதி மறுத்தது. 

கோபப்பட்ட தோனி 

2016 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது இந்தியா. அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் இந்திய கேப்டன் தோனி. 

செய்தியாளர் சந்திப்பில் தோனியிடன் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. வங்கதேசத்துடன் இந்திய அணி சுலபமாக ஜெயித்து, ரன் விகிதத்தை அதிகரிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால் நூலிழையில்தான் இந்திய அணி தோல்வியிலிருந்து தப்பியது. இந்த வெற்றியில் உங்களுக்கு எந்தளவுக்கு மகிழ்ச்சி என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்வியில் கடுப்பான தோனி இவ்வாறு பதில் அளித்தார்: இந்திய அணி வெற்றி பெற்றதில் உங்களுக்கு மகிழ்ச்சியில்லை என்று தெரிகிறது. உங்களுடைய கேள்வி, கேட்ட தொனி எல்லாமே அதையே வெளிப்படுத்துகிறது. கிரிக்கெட் போட்டிக்கென திரைக்கதை கிடையாது. டாஸில் தோற்றபிறகு இந்த மாதிரியான பிட்சில் ஆடியதால்தான் அதிக ரன்கள் எடுக்கமுடியவில்லை என்கிற விஷயங்களையும் அலசிப் பார்க்கவேண்டும். ஆனால் வெளியில் இருந்து இதையெல்லாம் அலசாமல் இருந்தீர்கள் என்றால் இந்தக் கேள்வியைக் கேட்கக்கூடாது என்று பதிலளித்தார்.

அப்பா பேச்சைக் கேட்கும் பிள்ளை

வீட்டில் நாங்கள் கிரிக்கெட் பற்றி பேசமாட்டோம். அது அவருடைய தொழில். அவர் தொழில்முறை விளையாட்டு வீரர். மகள் ஸிவா, அவர் சொல்வதைத்தான் கேட்பாள். சீக்கிரம் சாப்பிடு என நானோ மற்றவர்களோ சொல்ல வேண்டியிருந்தால் பத்து முறை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கும். தோனி ஒருமுறை தான் சொல்வார். உடனடியாக வேலையை முடித்துவிடுவாள் என்று 2020-ம் வருடம் பேட்டியளித்தார் சாக்‌ஷி.

நான் ஏன் கிரீஸில் பாய்ந்து விழவில்லை?

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்தியா, போட்டியிலிருந்து வெளியேறியது.

10 பந்துகளில் 25 ரன்கள் தேவை என்கிற நிலையில் இந்திய அணி இருந்தபோது 50 ரன்களில் இருந்த தோனி ரன் அவுட் ஆனார். சில அங்குல இடைவெளியில் தோனி ரன் அவுட் ஆனது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவேளை தோனி ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இந்திய அணி அரையிறுதியில் வென்றிருக்கவும் வாய்ப்பிருந்தது. 

இந்நிலையில் பேட்டியொன்றில் இந்த ஆட்டம் குறித்து வருத்தம் தெரிவித்தார் தோனி. அவர் கூறியதாவது:

முதல் ஆட்டத்திலும் இந்த ஆட்டத்திலும் ரன் அவுட் ஆனேன். அப்போது நான் ஏன் கிரீஸில் பாய்ந்து விழவில்லை என்று எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன். அந்த இரு அங்குல வித்தியாசம், நான் பாய்ந்து விழுந்திருக்க வேண்டும் என்று இப்போதும் சொல்ல வைக்கிறது என்று கூறினார். 

வீட்டுக்கு மஞ்சள் வண்ணம் பூசிய சிஎஸ்கே ரசிகர்: தோனி உருக்கம்
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். சிஎஸ்கே அணி மற்றும் தோனியின் தீவிர ரசிகரான இவர், தனது வீட்டுச் சுவரில் மஞ்சள் வண்ணம் பூசி தோனி மற்றும் சிஎஸ்கே அணி தொடர்பான படங்களை வரைந்துள்ளார். 

துபையில் பணிபுரியும் கோபி கிருஷ்ணன், விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். தோனியின் மீதான தனது பாசத்தை வெளிப்படுத்துவதற்காக தனது வீட்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் சிஎஸ்கேவின் மஞ்சள் வண்ணத்தைப் பூசி ஹோம் ஆஃப் தோனி ஃபேன், விசில் போடு என்கிற வாசகங்களையும் வீட்டுச் சுவரில் எழுதியுள்ளார். 

இந்த வீடு தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின. இதையடுத்து இதைப் பற்றி படங்களுடன் ட்வீட் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 

தனக்கும் சிஎஸ்கே அணிக்கும் கெளரவம் அளித்த கோபி கிருஷ்ணனுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார் தோனி. இதுபற்றி அவர் கூறியதாவது:

இதை இன்ஸ்டகிராமில் பார்த்தேன். இது மிகப்பெரிய மரியாதை. இது எனக்கானது மட்டுமல்ல, இவர்கள்தான் சிஎஸ்கேவின் மிகப்பெரிய ரசிகர்கள். அவர்கள் இதைச் செய்த விதம், சிஎஸ்கே மற்றும் என் மீதான அவர்களுடைய உணர்வை வெளிப்படுத்துகிறது. இதைச் சுலபமாகச் செய்துவிட முடியாது. நீங்கள் முடிவு செய்து, அதற்கு ஒட்டுமொத்தக் குடும்பமும் ஆதரவளிக்க வேண்டும். அதற்குப் பிறகே இதைச் செயல்படுத்த முடியும். இது நீண்ட நாள் நிலைக்கும். இது சமூகவலைத்தளங்களில் பதிவு போட்டு பிறகு மாற்றுவது போல் அல்ல. ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் என்னுடைய நன்றி என்றார்.

* கடந்த வருடம் ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தோனி.

இதுபற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியதாவது: உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இரவு 7.29 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாக வைத்துக் கொள்ளவும் என்றார்.

இதிலும் தனிப்பாணியா என்று கிரிக்கெட் உலகம் ஆச்சர்யப்பட்ட தருணம். 

Tags : dhoni BCCI
ADVERTISEMENT
ADVERTISEMENT