செய்திகள்

வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய அணி: ரவி சாஸ்திரி விமர்சனம்

5th Jul 2022 03:29 PM

ADVERTISEMENT

 

5-வது டெஸ்டில் இந்திய அணி நல்ல வாய்ப்புகளைத் தவறவிட்டதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

பிர்மிங்கமில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி, 61.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 81.5 ஓவர்களில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 57 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 76, பேர்ஸ்டோ 72 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 119 ரன்களே தேவைப்படுகின்றன. கைவசம் 7 விக்கெட்டுகள் மீதமுள்ளதால் வரலாற்று வெற்றியை அந்த அணி இன்று அடையவுள்ளது.

இந்நிலையில் 4-வது நாளன்று இந்திய அணியின் ஆட்டம் பற்றி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:

ADVERTISEMENT

மிகவும் வருத்தமாக உள்ளது. இந்திய அணி நன்கு பேட்டிங் செய்து இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை முழுமையாகத் தடுத்திருக்கலாம். இந்திய அணி 4-ம் நாளன்று முதல் இரு பகுதிகளிலும் பேட்டிங் செய்திருக்க வேண்டும். தடுப்பாட்ட முறையைக் கையாண்டார்கள். உணவு இடைவேளைக்குப் பிறகு பயத்துடன் விளையாடினார்கள். சில விக்கெட்டுகளை இழந்த பிறகும் கூட ரன் எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம். விரைவாக விக்கெட்டுகளை இழந்தார்கள். இதனால் இங்கிலாந்து அணி இலக்கை அடைவதற்கான போதுமான அவகாசத்தை அளித்து விட்டார்கள் என்றார். 

Tags : Shastri India
ADVERTISEMENT
ADVERTISEMENT