செய்திகள்

சதமடித்த ரூட், பேர்ஸ்டோ: 5-வது டெஸ்டை வென்று சாதனை படைத்த இங்கிலாந்து அணி

DIN

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்துள்ளது.

பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி, 61.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 81.5 ஓவர்களில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 57 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 76, பேர்ஸ்டோ 72 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 119 ரன்களே தேவைப்பட்டன. 

இன்றும் வழக்கம்போல அதிரடியாக விளையாடினார்கள் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும். 66-வது ஓவரில் இந்தக் கூட்டணி 200 ரன்களைத் தொட்டது. ஜோ ரூட், 136 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் சதமடித்தார். இது அவருடைய 28-வது டெஸ்ட் சதம். 2022-ல் தனது 5-வது சதத்தை அடித்துள்ளார் ரூட். 2021 ஜனவரி முதல் விளையாடிய 24 டெஸ்டுகளில் 11 சதங்களை எடுத்துள்ளார்.

அடுத்ததாக பேர்ஸ்டோவும் சதத்தைப் பூர்த்தி செய்தார். 138 பந்துகளில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகள் அடித்தார். 2022-ல் 8 டெஸ்டுகளில் 6 சதங்கள் அடித்துள்ளார் பேர்ஸ்டோ. இந்தியாவுக்கு எதிராக இந்த டெஸ்டில் இரு சதங்களும் நியூசிலாந்துக்கு எதிராக இரு சதங்களும் மே.இ. தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தலா ஒரு சதமும் அடித்துள்ளார். 

76.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது இங்கிலாந்து அணி. ஜோ ரூட் 142, பேர்ஸ்டோ 114 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

இதனால் டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆனது. 2007-க்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தது. ஆனால் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும் மிகச் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணி 5-வது டெஸ்டை வெல்ல உதவியுள்ளார்கள். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 4-வது இன்னிங்ஸில் அதிக ரன்களை எடுத்து வெற்றி பெற்ற அணி என்கிற புதிய சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. மேலும் இங்கிலாந்து அணி 4-வது இன்னிங்ஸில் அதிக ரன்களை விரட்டி வெற்றி பெற்றது இந்த டெஸ்டில் தான். 

டெஸ்ட் தொடருக்கு அடுத்ததாக இரு அணிகளும் டி20 தொடரில் மோதவுள்ளன. ஜூலை 7 அன்று முதல் டி20 ஆட்டம் செளதாம்ப்டனில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT