செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக 350+ ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற அணி உண்டா?

5th Jul 2022 01:28 PM

ADVERTISEMENT

 

5-வது டெஸ்டின் 5-வது நாளில் புதிய வரலாறு படைக்கவுள்ளது இங்கிலாந்து அணி. 

பிர்மிங்கமில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி, 61.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 81.5 ஓவர்களில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 57 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 76, பேர்ஸ்டோ 72 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 119 ரன்களே தேவைப்படுகின்றன. கைவசம் 7 விக்கெட்டுகள் மீதமுள்ளதால் வரலாற்று வெற்றியை அந்த அணி இன்று அடையவுள்ளது. 

1977-ல் ஆஸ்திரேலியா 339 ரன்களும் 1987-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணி 276 ரன்களும் 4-வது இன்னிங்ஸில் இந்தியாவுக்கு எதிராக எடுத்து வெற்றி பெற்றன. அதற்குப் பிறகு கடைசி இன்னிங்ஸில் எதிரணிகளுக்கு 250+ ரன்கள் இலக்கு நிர்ணயித்ததில் ஒருமுறையும் இந்திய அணி தோல்வி கண்டதில்லை.

ADVERTISEMENT

இந்திய அணிக்கு எதிராக 4-வது இன்னிங்ஸில் 350  ரன்களுக்கு மேல் சிலமுறை எடுக்கப்பட்டாலும் ஒருமுறை கூட எதிரணிகளால் வெற்றி பெற முடிந்ததில்லை. 

4-வது இன்னிங்ஸில் இந்தியாவுக்கு எதிராக 3 முறை எதிரணிகள் 350 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளன. ஆனால் அந்த மூன்று ஆட்டங்களும் டிராவில் தான் முடிவடைந்துள்ளன. 

அதிகபட்சமாக 2013-ல் தோனி தலைமையிலான இந்திய அணி ஜொஹன்னஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்காவுக்கு 458 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. தெ.ஆ. அணி, 136 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 450 ரன்கள் எடுத்து நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டு டிரா செய்தது. 

2004-ல் சிட்னியில் ஆஸ்திரேலியா 357/6 ரன்களும் 2007-ல் இங்கிலாந்து 369/6 ரன்களும் எடுத்து டெஸ்டுகளை டிரா செய்துள்ளன. 

இதனால் இன்று இங்கிலாந்து அணி 378 ரன்களை அடைந்தால் அது புதிய சாதனையாக இருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT