செய்திகள்

சாதனை படைத்த மந்தனா, ஷஃபாலி: ஒருநாள் தொடரை வென்ற இந்திய மகளிர் அணி!

4th Jul 2022 04:49 PM

ADVERTISEMENT

 

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. 

இந்திய மகளிர் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடரை 2-1 என இந்தியா வென்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது இந்திய அணி. 

2-வது ஒருநாள் ஆட்டம் பல்லேகலேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இம்முறையும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள். இதனால் இலங்கை அணி 50 ஓவர்களில் 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. காஞ்சனா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரேணுகா சிங் 10 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் 171 ரன்கள் எடுத்த இலங்கை அணி இந்தமுறையும் பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தியத் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனாவும் ஷஃபாலி வர்மாவும் ஆரம்பம் முதல் இலங்கைப் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார்கள். 10 ஓவர்களில் 55 ரன்களும் 20 ஓவர்களில் 113 ரன்களும் எடுத்து வலுவான தொடக்கத்தை அளித்தார்கள். மந்தனா 56 பந்துகளிலும் ஷஃபாலி 57 பந்துகளிலும் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்கள். மந்தாவுக்கு இது 23-வது ஒருநாள் அரை சதம். ஷஃபாலிக்கு இது 4-வது. சில கேட்சுகளை நழுவ விட்டதால் கடைசி வரை இலங்கை அணியால் இந்த ஜோடியைப் பிரிக்க முடியவில்லை. இந்திய அணி 25.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதோடு ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. மந்தனா 94, ஷஃபாலி 71 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இலங்கைக்கு எதிராக எந்தவொரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் எடுத்த இந்தியக் கூட்டணி என்கிற பெருமையை இருவரும் பெற்றார்கள். மேலும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் எந்தவொரு அணியும் ஒரு விக்கெட்டும் இழக்காமல் விரட்டிய அதிகபட்ச இலக்கும் இதுதான்.

3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் வியாழன் அன்று நடைபெறவுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT