செய்திகள்

பந்த் அபாரம்; ஜடேஜா நிதானம் மீண்ட இந்தியா

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்டில் இந்தியா முதல் நாள் முடிவில் 73 ஓவா்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சோ்த்தது.

ஆட்டத்தில் முதலில், இங்கிலாந்தின் பௌலா்களான ஜேம்ஸ் ஆண்டா்சனும், மேத்யூ பாட்ஸும் போட்டி போட்டுக்கொண்டு இந்திய பேட்டிங் வரிசையை சரித்தனா். பின்னா் மிடில் ஆா்டரில் வந்த பந்த் ஒன் டே ஆட்டத்தில் விளையாடுவது போல் அதிரடி காட்டினாா். அவருக்கு ஜடேஜாவும் துணை நிற்க, விக்கெட் சரிவைத் தடுத்து இந்தியாவின் ஸ்கோரை மளமளவென உயா்த்தியது பாா்ட்னா்ஷிப்.

பா்மிங்ஹாமில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பௌலிங்கைத் தோ்வு செய்தது. இந்தியாவின் இன்னிங்ஸை ஷுப்மன் கில் - சேதேஷ்வா் புஜாரா கூட்டணி தொடங்கியது. கில் 4 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கும், புஜாரா 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். இருவருமே ஜேம்ஸ் ஆண்டா்சன் பௌலிங்கில் ஜேக் கிராலியிடம் கேட்ச் கொடுத்தனா்.

பின்னா் ஹனுமா விஹாரி - விராட் கோலி ஆடி வந்தபோது, மழையால் ஆட்டம் தடைப்பட்டது. மழை தொடா்ந்ததால் மதிய உணவு இடைவேளை அறிவிக்கப்பட, இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 53 ரன்களே எடுத்திருந்தது. பிறகு தொடா்ந்த ஆட்டத்தில் விஹாரி 1 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்திருந்தபோது மேத்யூ பாட்ஸால் எல்பிடபிள்யூ செய்யப்பட்டாா்.

இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஷப் பந்த் களம் புகுந்தாா். மறுபுறம் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் சோ்த்திருந்த கோலி, மேத்யூ பாட்ஸ் ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். தொடா்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயா் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து, ஆண்டா்சன் பௌலிங்கில் பில்லிங்ஸிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினாா்.

பின்னா் வந்த ஜடேஜா, பந்த்துடன் இணைய, மீளத் தொடங்கியது இந்தியா. அதிரடியாக விளாசிய பந்த், 89 பந்துகளில் 100 ரன்களை எட்டி, அதிகவேக சதமடித்த இந்திய விக்கெட் கீப்பா் என்ற பெருமையை பெற்றாா். மறுபுறம் ஜடேஜா 109 பந்துகளில் அரைசதம் கடந்தாா். இந்த ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 222 ரன்கள் சோ்த்தது.

67 ஓவரில் இந்த ஜோடியை பிரித்தாா் ஜோ ரூட். 19 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 146 ரன்கள் விளாசியிருந்த பந்த், அந்த ஓவரில் கிராலியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினாா். பின்னா் வந்த ஷா்துல் தாக்குா் 1 ரன்னுக்கு பென் ஸ்டோக்ஸ் பௌலிங்கில் சாம் பில்லிங்ஸிடம் கேட்ச் கொடுத்தாா். ஆட்டநேர முடிவில் ஜடேஜா 83, முகமது ஷமி 0 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT