செய்திகள்

பிராட் ஓவரில் 35 ரன்கள்: உலக சாதனை படைத்த பும்ரா (விடியோ)

2nd Jul 2022 04:49 PM

ADVERTISEMENT

 

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் பிராட் ஓவரில் இந்திய அணிக்கு 35 ரன்கள் கிடைத்தன. அந்த ஓவரில் 29 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார் பும்ரா.

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளது. 98/5 என்கிற நிலையில் இருந்த இந்தியா பிறகு ரிஷப் பந்த், ஜடேஜாவின் அற்புத சதங்களாலும் பும்ராவின் கடைசிக்கட்ட அதிரடி ஆட்டத்தினாலும் கெளரவமான ஸ்கோரைப் பெற்றுள்ளது.  

ஜடேஜாவும் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் - 375/9. கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ராவும் சிராஜும் குறைந்தது 10 ரன்களாவது எடுக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் விரும்பினார்கள். ஆனால் நடந்தது வேறு.

ADVERTISEMENT

பிராட் வீசிய 84-வது ஓவரில் எதிர்பாராதது நிகழ்ந்தது. அந்த ஓவரில் பும்ரா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்தார். இது தவிர நோ பால், வைட் என அந்த ஓவரில் நம்பமுடியாத அளவுக்கு 35 ரன்கள் கிடைத்தன. டெஸ்ட் வரலாற்றில் எந்த ஒரு பந்துவீச்சாளரும் (பிராட்) 35 ரன்கள் கொடுத்தது கிடையாது. அதேபோல டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த ஒரு பேட்டரும் (பும்ரா) ஒரு ஓவரில் 29 ரன்கள் எடுத்தது கிடையாது. 

இதற்கு முன்பு பிரையன் லாரா, பெய்லி ஆகியோர் ஒரு ஓவரில் 28 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. 

2003-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ராபின் பீட்டர்சன் ஓவரில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடித்து சாதனை செய்தார் லாரா. 2013-ல் இங்கிலாந்தின் ஆண்டர்சன் ஓவரில் ஆஸ்திரேலியாவின் பெய்லி 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள், 2 ரன்கள் என 28 ரன்கள் எடுத்தார். 

இந்தச் சாதனைகளை முறியடித்து 29 ரன்களுடன் புதிய உலக சாதனை படைத்துள்ளார் பும்ரா. அவர் அடித்த 29 ரன்கள் தவிர வைட் வழியாக பவுண்டரி (5 ரன்கள்) ஒரு நோ பால் (1 ரன்) ஆகியவற்றால் அந்த ஓவரில் 35 ரன்கள் எடுக்கப்பட்டன.

4, 5வைட், 7 நோ பால் (ஒரு சிக்ஸர்), 4, 4, 4, 6, 1. (கடைசிப் பந்து)

அதேபோல டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு ஓவரிலும் 35 ரன்கள் கொடுக்கப்பட்டதில்லை. இதற்கு முன்பு பீட்டர்சன் (தெ.ஆ), ஆண்டர்சன், ரூட் (இங்கிலாந்து) ஆகியோர் ஒரு ஓவரில் 28 ரன்கள் கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது 35 ரன்கள் கொடுத்து முதலிடம் பிடித்துள்ளார் பிராட்.

டெஸ்டில் மட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டிலும் ஒரு ஓவரில் அதிக ரன்களைக் கொடுத்தவர் பிராட் தான் என்பது நமக்குத் தெரியும். 2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார் இந்தியாவின் யுவ்ராஜ் சிங். அதேபோல டி20யில் இலங்கையின் தனஞ்ஜெயாவும் 36 ரன்கள் கொடுத்துள்ளார். பொலார்ட் 6 சிக்ஸர்கள் அடித்தார். நல்லவேளையாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளராக பிராட் இல்லை. 

ADVERTISEMENT
ADVERTISEMENT