செய்திகள்

5-வது டெஸ்ட்: மீண்டும் வர்ணனைக்குத் திரும்பிய ரவி சாஸ்திரி

1st Jul 2022 04:03 PM

ADVERTISEMENT

 

முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி விளையாடும் சர்வதேச ஆட்டத்தில் வர்ணனையாளராகப் பண்புரிந்து வருகிறார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் 2021 டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 

2017-ல் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் இருமுறை டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்தது இந்திய அணி. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. வெளிநாடுகளில் ஒருநாள், டி20 தொடர்களை வென்றது. ஒரே குறை, ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணியால் உலகக் கோப்பைப் போட்டியை வெல்ல முடியவில்லை. 2014-16 காலகட்டத்தில் இந்திய அணியின் இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார். இந்தியப் பயிற்சியாளர் பதவிக்கு அடுத்ததாக லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் எனப்படும் எல்.எல்.சி. போட்டியின் ஆணையராகப் பணியாற்றினார். 

ADVERTISEMENT

முன்னாள் வீரராக அறியப்பட்ட ரவி சாஸ்திரி பல ஆண்டுகளாக வர்ணனையாளராகவும் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். கிரிக்கெட் ஒளிபரப்புக்கு அவருடைய வர்ணனை பெரிய பலமாக இருந்தது. எனினும் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆன பிறகு அவரால் அந்தப் பணியில் ஈடுபட முடியாமல் போனது. 

பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய பிறகு ஐபிஎல் 2022 போட்டியில் வர்ணனைக் குழுவில் இடம்பெற்றிருந்தாலும் இறுதிச்சுற்றில் மட்டுமே ஆங்கில வர்ணனையில் ஈடுபட்டார். இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்டில் வர்ணனை செய்து வருகிறார் ரவி சாஸ்திரி. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி விளையாடும் சர்வதேச ஆட்டங்களில் வர்ணனை செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. முக்கியமான இந்த டெஸ்டில் ரவி சாஸ்திரி வர்ணனையாளராகப் பணிபுரிவதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT