செய்திகள்

ஜிம்பாப்வே வீரருக்கு மூன்றரை ஆண்டுகள் தடை விதித்த ஐசிசி

DIN


ஸ்பாட் ஃபிக்ஸிங், ஊக்க மருந்து ஆகிய விவகாரங்கள் தொடர்பாக சமீபத்தில் ஓய்வு பெற்ற ஜிம்பாப்வே வீரர் பிரண்டன் டெய்லருக்கு மூன்றரை ஆண்டுகள் தடை விதித்துள்ளது ஐசிசி.

ஜிம்பாப்வே வீரர் பிரண்டன் டெய்லர், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011 - 2021 காலகட்டங்களில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும்  71 ஆட்டங்களில் ஜிம்பாப்வே அணி கேப்டனாகப் பணியாற்றியுள்ளார்.  ஜிம்பாப்வே அணிக்காக 2004 முதல் விளையாட ஆரம்பித்த டெய்லர், 34 டெஸ்ட், 205 ஒருநாள், 45 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே வீரர்களின் பட்டியலில் 2-ம் இடத்தில் அவர் உள்ளார். எனினும் ஒருநாள் கிரிக்கெட்டில் 11 சதங்கள் அடித்து, அதிக சதங்கள் அடித்த ஜிம்பாப்வே வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபடுவதற்காக இந்தியாவில் இருந்து சூதாட்டத் தரகா்கள் தன்னை அணுகினா் எனக் கடந்த வாரம் பிரண்டன் டெய்லா் தெரிவித்தார். 

கடந்த 2019-ல் இந்திய வியாபாரிகள் சிலா் ஜிம்பாப்வேயில் டி20 தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்க இந்தியாவுக்கு வருமாறு அழைத்தனா். இதற்காக 15,000 அமெரிக்க டாலா்கள் தொகை தருவதாகவும் கூறினா். இதனால் நான் இந்தியாவுக்குச் சென்றபோது, தங்கியிருந்த ஓட்டலில் சிலருடன் மது அருந்தினேன். அப்போது அவா்கள் கோகைன் என்ற போதைப்பொருளை வழங்கி சாப்பிடுமாறு கூறிய நிலையில் முட்டாள்தனமாக அதை உண்டேன். மறுநாள் நான் கோகைன் உண்ட விடியோ காட்சியைக் காண்பித்து மிரட்டினா். அவா்களுக்காக சா்வதேச ஆட்டங்களில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினா். 6 போ் பலவந்தப்படுத்தியதால் எனது பாதுகாப்பே கேள்விக்குறியாகி விட்டது. 15,000 அமெரிக்க டாலா்களை வழங்கினா். அப்போது இருந்த சூழ்நிலையில் என்னால் எதுவும் செய்ய முடியாமல் விமானத்தில் ஊா் திரும்பி விட்டேன். குடும்பப் பாதுகாப்பு கருதி இதை தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தை ஐசிசியிடம் புகாராகத் தெரிவிக்க நான்கு மாதங்களாகின. எந்தவொரு மேட்ச் ஃபிக்ஸிங்கிலும் நான் ஈடுபடவில்லை. நான் ஏமாற்றுப் பேர்வழி அல்லன். என் புகார் தொடர்பான ஐசிசியின் விசாரணையில் கலந்துகொண்டேன். என் மீது பல ஆண்டு தடை விதிக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது. இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எந்தவொரு மேட்ச் ஃபிக்ஸிங் அழைப்பையும் உடனடியாகப் புகாரளிக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர்களுக்கு இது பாடமாக இருக்கவேண்டும் என்றாா்.

இந்நிலையில் மேட்ச் ஃபிக்ஸிங் தொடர்பான புகாரைத் தாமதமாகத் தெரிவித்ததற்காக டெய்லருக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மூன்றரை ஆண்டுகள் தடை விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. ஜனவரி 28, 2022 முதல் தொடங்கும் இந்தத் தடையை டெய்லர் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் ஊக்க மருந்துத் தடுப்பு விதிமுறைகளை மீறிய குற்றத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார் டெய்லர். இதற்காக ஒரு மாதம் கூடுதலாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 28 ஜூலை 2025-க்குப் பிறகே கிரிக்கெட் போட்டிகளில் பிரண்டன் டெய்லரால் ஈடுபட முடியும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தட்டுப்பாடு: ஒசூா் மாநகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்

வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்

கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

திருமலை: 60,371 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT