செய்திகள்

டி20 கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக விலகிய பிரபல வங்கதேச வீரர்

28th Jan 2022 11:34 AM

ADVERTISEMENT

 

ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவுள்ளதாகப் பிரபல வங்கதேச வீரர் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார். 

கடந்த வருட ஏப்ரல் - மே மாதங்களில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிம் இக்பாலுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் தமிம் இக்பால் விளையாடவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. 2019 முதல் மூன்று டி20 ஆட்டங்களில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார். இதையடுத்து 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகினார். கடந்த 15, 20 டி20 ஆட்டங்களில் நான் விளையாடவில்லை. எனக்குப் பதிலாக யார் விளையாடியிருந்தாலும் அவர்களுடைய இடத்தை எடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. நீண்ட நாளாக விளையாடாதது, காயம் ஏற்பட்டது போன்றவை இம்முடிவுக்கான காரணங்கள்.  டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடாமல் போனாலும் டி20 கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு பெறவில்லை என்று தனது முடிவுக்கு அப்போது விளக்கம் அளித்தார் தமிம் இக்பால். 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் 12 சுற்றில் வங்கதேச அணி விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோற்றது.

ADVERTISEMENT

இந்நிலையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு டி20 கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை என தமிம் இக்பால் அறிவித்துள்ளார். இதனால் இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்தும் அவர் விலகியுள்ளார். வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் மற்றும் இதர அதிகாரிகளுடன் விவாதித்த பிறகு இம்முடிவை அவர் அறிவித்துள்ளார். இதுபற்றி தமிம் இக்பால் கூறியதாவது:

டி20 கிரிக்கெட்டில் என்னுடைய எதிர்காலம் பற்றி விவாதித்தோம். இந்த வருட டி20 உலகக் கோப்பை வரை நான் விளையாட வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் என்னை வலியுறுத்தினார்கள். ஆனால் எனக்கு வேறு எண்ணம் உள்ளது.  அடுத்த ஆறு மாதங்களுக்கு டி20 கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை. டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே என் கவனம் இருக்கும். டி20 கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்கு என் தேவையிருக்காது என எண்ணுகிறேன். ஆனால் கடவுள் நினைத்தால், கிரிக்கெட் வாரியத்துக்கு நான் தேவைப்பட்டால் விளையாட நான் தயார். அப்போது டி20 கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுவது பற்றி யோசிப்பேன் என்றார். 
 

Tags : Tamim Iqbal
ADVERTISEMENT
ADVERTISEMENT