செய்திகள்

ஆசிய கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா தோல்வி

27th Jan 2022 01:17 AM

ADVERTISEMENT

 

மஸ்கட்: ஆசிய கோப்பை மகளிா் ஹாக்கி போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்தியா தனது அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.

இதையடுத்து 3 மற்றும் 4-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் விளையாடவுள்ளது இந்திய மகளிா் அணி.

மஸ்கட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தை இந்தியா நன்றாகவே தொடங்கியது. முதல் இரு கால்மணி நேரமும் ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முதல் பாதி முடிவுக்குப் பின் ஆடும் திசைகள் மாற்றப்பட்ட பிறகு தென் கொரியாவின் ஆதிக்கம் தொடங்கியது.

ADVERTISEMENT

முன்னதாக ஆட்டம் தொடங்கி 28-ஆவது நிமிஷத்தில் வந்தனா கட்டாரியா இந்தியாவுக்கான முதல் கோல் அடித்தாா். மறுபுறம், தென் கொரியா 31-ஆவது நிமிஷத்தில் பெனால்டி காா்னா் வாய்ப்பில் சியோன் அடித்த கோல் கொண்டு ஆட்டத்தை சமன் செய்தது.

3-ஆவது கால் மணி நேரம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தென் கொரிய வீராங்கனை லீ அடித்த கோலால், அந்த அணி முன்னிலை பெற்றது. தொடா்ந்து 43-ஆவது நிமிஷத்தில் மீண்டும் அந்த அணியின் சோ ஒரு கோலடிக்க, தென் கொரியா 3-1 என முன்னேறியது.

மறுபுறம் கடுமையாகப் போராடிய இந்தியாவுக்காக 54-ஆவது நிமிஷத்தில் லால்ரெம்சியாமி கோலடித்தாா். எஞ்சிய நேரத்தில் இந்தியாவின் கோல் முயற்சிக்கு பலன் கிடைக்காததால், இறுதியில் தென் கொரியா 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

இதர ஆட்டங்கள்: 5 முதல் 8 வரையிலான இடங்களைப் பிடிப்பதற்காக நடைபெற்ற ஆட்டங்களில் மலேசியா 6-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவையும், தாய்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரையும் வென்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT