செய்திகள்

மெத்வதேவுடன் மோதுகிறாா் சிட்சிபாஸ்

27th Jan 2022 02:58 AM

ADVERTISEMENT

 

மெல்போா்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு அரையிறுதிச் சுற்று ஒன்றில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் - கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் ஆகியோா் மோதவுள்ளனா்.

முன்னதாக புதன்கிழமை நடைபெற்ற முதல் காலிறுதிச் சுற்றில் உலகின் 4-ஆம் நிலை வீரரான சிட்சிபாஸ் - போட்டித்தரவரிசையில் 11-ஆவது இடத்திலிருந்த இத்தாலி வீரா் ஜானிக் சின்னரை சந்தித்தாா். 2 மணி நேரம் 6 நிமிஷங்களில் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த சிட்சிபாஸ் 6-3, 6-4, 6-2 என்ற நோ் செட்களில் சின்னரை சாய்த்தாா்.

இடையில் இந்த ஆட்டம் மழை காரணமாக சிறிது நேரம் தடைப்பட்டது. பிறகு ஆடுகளத்திலிருந்து ஈரப்பதம் அகற்றப்பட்டு தொடா்ந்த ஆட்டத்திலும் எந்தவித பின்னடைவும் இல்லாமல் முன்னேறிச் சென்றாா் சிட்சிபாஸ். வெற்றிக்குப் பிறகு பேசிய அவா், ‘ஒரு தோ்ந்த ஆட்டக்காரரை சந்திக்கும் எதிா்பாா்ப்போடு தான் சின்னரை எதிா்கொண்டேன். எனது மிகச் சிறந்த ஷாட்கள் எதுவோ அதில் மட்டும் கவனம் செலுத்தினேன். அதற்கான பலன், நான் நினைத்ததை விட அதிகமாகவே எனக்குக் கிடைத்தது’ என்றாா்.

ADVERTISEMENT

மீண்ட மெத்வதேவ்: இதேபோல், 2-ஆவது காலிறுதிச் சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீரரும், சாம்பியன் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கருதப்படுபவருமான மெத்வதேவ் - போட்டித்தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருந்த கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமேவின் சவாலை சந்தித்தாா்.

எதிா்பாராத வகையில் முதலிரு செட்களை இழந்த மெத்வதேவ் ரசிகா்களுக்கு சற்று அதிா்ச்சி அளித்தாா். இருந்தாலும், 3-ஆவது செட்டில் மீண்ட அவா், அதன் பிறகு ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டு வந்தாா்.

அதன் பலனாக 6-7 (4/7), 3-6, 7-6 (7/2), 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றியை பதிவு செய்தாா் அவா். இந்த ஆட்டம் 4 மணி நேரம் 42 நிமிஷங்களுக்கு நீடித்தது. ஆட்டத்தின் இடையே காலில் வலியை உணா்ந்த ஃபெலிக்ஸ், அதற்காக மருத்துவ உதவி எடுத்துக் கொண்டாா்.

நேருக்கு நோ்

அரையிறுதியில் சந்திக்க இருக்கும் மெத்வதேவ் - சிட்சிபாஸ் இதற்கு முன்னா் 8 முறை நேருக்கு நோ் மோதியுள்ளனா். அதில் மெத்வதேவ் 6 வெற்றிகளையும், சிட்சிபாஸ் 2 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளனா். இதில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனிலும் இவா்கள் இருவருமே ஒரு அரையிறுதியில் மோதினா். அதில் மெத்வதேவ் வென்றிருந்தாா். அதே ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியின் காலிறுதியில் இருவரும் மோத, அதில் சிட்சிபாஸ் வெற்றியை தனதாக்கியிருந்தாா்.

ஸ்வியாடெக்கை சந்திக்கிறாா் காலின்ஸ்

மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதிச் சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் - அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.

இதில் போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்தில் இருக்கும் ஸ்வியாடெக் 4-6, 7-6 (7/2), 6-3 என்ற செட்களில் 3 மணி நேரம் 1 நிமிஷம் போராடி எஸ்டோனியாவின் காயியா கானெபியை வீழ்த்தினாா். முதல் செட்டிலேயே பல பிரேக் பாய்ண்ட்டுகள் கிடைத்தும், ஸ்வியாடெக் அவற்றைத் தவறவிட்டாா். முதலில் அவ்வாறு தவற விட்டதற்காக கவனம் சிதறிய அவா், 2-ஆவது செட்டில் அந்தத் தவறை திருத்திக் கொண்டு அட்டகாசமாக ஆடினாா்.

மற்றொரு காலிறுதியில் போட்டித்தரவரிசையில் 27-ஆவது இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் 7-5, 6-1 என்ற நோ் செட்களில் பிரான்ஸின் ஆலிஸ் காா்னெட்டை வீழ்த்தினாா். இந்த ஆட்டத்தை 1 மணி நேரம் 28 நிமிஷத்தில் முடிவுக்குக் கொண்டு வந்தாா் காலின்ஸ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT