செய்திகள்

யூஏஇ போல அதிக செலவு ஆகாது: ஐபிஎல் போட்டியை நடத்த தெ.ஆ. விருப்பம்

25th Jan 2022 02:14 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் 2022 போட்டியை தென்னாப்பிரிக்காவில் நடத்த தெ.ஆ. கிரிக்கெட் சங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. 

2021 ஐபிஎல் போட்டி கரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் முதல் பாதியும் அதன்பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைபெற்றது. இந்த வருடம் இந்தியாவில் ஐபிஎல் போட்டியை நடத்தவே பிசிசிஐ விரும்புகிறது. எனினும் கரோனா பாதிப்பு குறையாவிட்டால் இந்தியாவில் நடத்துவதற்குப் பதிலாக மீண்டும் வெளிநாட்டில் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. 

ADVERTISEMENT

இந்நிலையில் தங்களுடைய நாட்டில் ஐபிஎல் 2022 போட்டியை நடத்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களுடைய நாட்டில் உள்ள சாதகமான அம்சங்கள் என தெ.ஆ. கிரிக்கெட் சங்கம் குறிப்பிட்டவை:

ஐக்கிய அரபு அமீரகத்தை விடவும் தென்னாப்பிரிக்காவில் ஹோட்டல் செலவுகள் குறைவு. 

தென்னாப்பிரிக்காவில் ஜொஹன்னஸ்பர்க்கைச் சுற்றி 4 மைதானங்கள் உள்ளன. இந்த 4 மைதானங்களிலும் ஏராளமான ஆட்டங்களை நடத்த முடியும். 4 மைதானங்களிலும் பகலிரவு ஆட்டங்களை நடத்தக்கூடிய வசதிகள் உள்ளன. வாகனத்தில் செல்லக்கூடிய குறைந்த தூரத்தில் தான் ஒவ்வொன்றும் உள்ளன. 

கேப்டவுனிலும் அதன் அருகில் உள்ள பார்ல் மைதானத்திலும் போட்டியை நடத்தலாம். சமீபத்தில் தெ.ஆ.வுக்கு இந்தியா சுற்றுப்பயணம் செய்தபோது மொத்தம் 6 ஆட்டங்களில் 4 ஆட்டங்கள் இந்த இரு மைதானங்களிலும் தான் நடைபெற்றன.

2009-ல் தென்னாப்பிரிக்காவில் ஏற்கெனவே ஐபிஎல் போட்டி நடைபெற்றுள்ளது.

இந்த அம்சங்களைக் குறிப்பிட்டு ஐபிஎல் 2022 போட்டி தங்களுடைய நாட்டில் நடைபெற வேண்டும் என தெ.ஆ. கிரிக்கெட் சங்கம் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியச் சுற்றுப்பயணம் பாதுகாப்பாக அமைந்ததால் இந்தியாவில் ஐபிஎல் போட்டியை நடத்த முடியாவிடால் தென்னாப்பிரிக்காவில் நடத்த பிசிசிஐ திட்டமிடும் என்றே தெரிகிறது. 

Tags : South Africa
ADVERTISEMENT
ADVERTISEMENT