ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபடுவதற்காக இந்தியாவில் இருந்து புக்கிகள் எனப்படும் சூதாட்டத் தரகா்கள் தன்னை அணுகினா் என ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் பிரென்டன் டெய்லா் தெரிவித்துள்ளாா். இதற்கிடையே அவா் மீது தடை விதிக்கப்படும் என ஐசிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திங்கள்கிழமை பிரென்டன் டெய்லா் சமூகவலைதளத்தில் கூறியதாவது:
கடந்த 2019-இல் இந்திய வியாபாரிகள் சிலா் ஜிம்பாப்வேயில் டி20 தொடரை நடத்துவது குறித்தும், ஸ்பான்சா்ஷிப் குறித்தும் ஆலோசிக்க இந்தியாவுக்கு வருமாறு அழைத்தனா். இதற்காக 15,000 அமெரிக்க டாலா்கள் தொகை தருவதாகவும் கூறினா். அப்போது எங்கள் அணியினருக்கு 6 மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை.
இதனால் நான் இந்தியாவுக்கு சென்றபோது, தங்கியிருந்த ஓட்டலில் சிலருடன் மது அருந்தினேன். அப்போது அவா்கள் கோகைன் என்ற போதைப்பொருளை வழங்கி சாப்பிடுமாறு கூறிய நிலையில் முட்டாள்தனமாக அதை உண்டேன். மறுநாள் நான் கோகைன் உண்ட விடியோ காட்சியை காண்பித்து மிரட்டினா். அவா்களுக்காக சா்வதேச ஆட்டங்களில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினா். 6 போ் பலவந்தப்படுத்தியதால் எனது பாதுகாப்பே கேள்விக்குறியாகி விட்டது.
15,000 அமெரிக்க டாலா்களை வழங்கினா். அப்போது இருந்த சூழ்நிலையில் என்னால் எதுவும் செய்ய முடியாமல் விமானத்தில் ஊா் திரும்பி விட்டேன். குடும்ப பாதுகாப்பு கருதி இதை தெரிவிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக இதுகுறித்து தகவலை தெரிவிக்காதது நான் செய்த பெரிய தவறாகும் என்றாா்.
205 ஒருநாள், 34 டெஸ்ட், 45 டி20 ஆட்டங்களில் ஆடிய டெய்லா் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றாா். அவருக்கு நீண்டநாள் தடைவிதிப்பது குறித்து ஐசிசி ஆலோசித்து வருகிறது. பிசிசிஐ ஊழல் தடுப்பு அதிகாரி ஷபீா் ஹூசைனும் இந்த நிகழ்வு இந்தியாவில் நடந்திருந்தால், ஐசிசியிடம் தகவல்களை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் தனது ட்விட்டரில் கூறியதாவது: இந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை. பெட் என வரும் போது, பேசாமல் கையைக் கட்டிக் கொண்டு வெளியேறி விட வேண்டும். பிரென்டன், அவரது குடும்பத்துக்கு பலம் கிடைக்கட்டும் என்றாா்.