செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: இளம் சாதனையாளர் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி

18th Jan 2022 12:24 PM

ADVERTISEMENT

 

யு.எஸ். ஓபன் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய லேலா பெர்னாண்டஸை ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் முதல் சுற்றில் மேடிசன் இங்லிஸ் தோற்கடித்துள்ளார். 

கடந்த வருடம் நடைபெற்ற யு.எஸ். ஓபன் போட்டியில் தரவரிசையில் 73-ம் இடத்தில் இருந்த 19 வயது லேலா பெர்னாண்டஸ், 3-வது சுற்றில் ஒசாகாவை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். பிறகு, 4-வது சுற்றில் பிரபல வீராங்கனையும் 2016 யு.எஸ். ஓபன் சாம்பியனுமான ஜெர்மனியைச் சேர்ந்த கெர்பரையும் காலிறுதியில் உலகின் நெ.5 வீராங்கனையான உக்ரைனைச் சேர்ந்த எலினா ஸ்விடோலினாவையும் வீழ்த்தி டென்னிஸ் உலகின் கவனத்தை ஈர்த்தார். அரையிறுதியில்  உலகின் நெ.2 வீராங்கனை அரினா சபலேன்காவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச்சுற்றில் 18 வயது எம்மா ரடுகானுவிடம் தோல்வியடைந்தார். 1999 யு.எஸ். ஓபன் போட்டியில் முதல் 5 இடங்களில் இடம்பெற்ற மூன்று வீராங்கனைகளை வீழ்த்தினார் செரீனா வில்லியம்ஸ். அதன்பிறகு கிரான்ட்ஸ்லாம் போட்டியில் முதல் 5 இடங்களில் இடம்பெற்ற மூன்று வீராங்கனைகளை வீழ்த்திய இளம் வீராங்கனை என்கிற சாதனையைப் படைத்தார் லேலா. 

யு.எஸ். ஓபன் போட்டியில் சாதித்த லேலா, ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் தொடர்ந்து மூன்று வருடங்களாக முதல் சுற்றிலேயே அவர் தோல்வியடைந்துள்ளார். 

ADVERTISEMENT

மேடிசன் இங்லிஸ்

தரவரிசையில் 133-ம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேடிசன் இங்லிஸ், 23-வது இடத்தில் உள்ள லேலாவை எதிர்கொண்டார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இங்லிஸ் இதுவரை ஒரு வெற்றியும் பெற்றதில்லை. எனினும் இம்முறை சிறப்பாக விளையாடி 6-4, 6-2 என நேர் செட்களில் லேலாவைத் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT