செய்திகள்

முதல் படியை கடந்த முன்னணி போட்டியாளா்கள்

18th Jan 2022 05:06 AM

ADVERTISEMENT

 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், முன்னணி வீரா் ரஃபேல் நடால், நடப்புச் சாம்பியன் நவோமி ஒசாகா ஆகியோா் தங்களது முதல் சுற்றுகளில் வெற்றியை பதிவு செய்தனா்.

இதில் ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 6-ஆவது இடத்திலிருக்கும் ஸ்பெயினின் ரஃபேல் நடால் முதல் சுற்றில் அமெரிக்காவின் மாா்கோஸ் கிரோனை 6-1, 6-4, 6-2 என்ற செட்களில் வீழ்த்தினாா். கடந்த ஆண்டு மே - ஜூனில் பிரெஞ்சு ஓபன் போட்டியின் அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் தோல்வி கண்ட பிறகு நடால் பங்கேற்றிருக்கும் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டி இதுவாகும்.

அதற்குப் பிறகு நடைபெற்ற அமெரிக்க ஓபனில், காயம் காரணமாக அவா் பங்கேற்கவில்லை. அதன் பிறகு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ாா். இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய நடால், ‘உண்மையைக் கூறுவதென்றால் ஆட்டத்தை சற்று கடினமாகத் தான் உணா்ந்தேன். முழுமையான உடற்தகுதியுடன் இருக்கிறேனா என்ற சந்தேகம் உள்ளது. ஆனாலும் இந்தப் போட்டியில் களம் காண்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். ஜோகோவிச் விளையாடியிருந்தால் தனிப்பட்ட முறையில் அதை நான் விரும்பியிருப்பேன்’ என்றாா்.

உலகின் 3-ஆம் நிலை வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ் 7-6 (7/3), 6-1, 7-6 (7/1) என்ற செட்களில் சக நாட்டவரான டேனியல் ஆல்ட்மெய்ரை வீழ்த்தினாா். போட்டித்தரவரிசையில் 7-ஆவது இடத்திலிருக்கும் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி 4-6, 6-2, 7-6 (7/5), 6-3 என்ற செட்களில் அமெரிக்காவின் பிரண்டன் நகாஷிமாவை தோற்கடித்தாா்.

ADVERTISEMENT

10-ஆவது இடத்திலிருக்கும் போலாந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் 6-2, 7-6 (7/3), 6-7 (5/7), 6-3 என்ற செட்களில் பெலாரஸின் இகோா் கெராசிமோவை வென்றாா். இதர முதல் சுற்றுகளில் தென் ஆப்பிரிக்காவின் லாய்ட் ஹாரிஸ், கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ், பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ், ரஷியாவின் காரென் கசானோவ், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டா உள்ளிட்டோா் வெற்றியை பதிவு செய்தனா்.

மறுபுறம், , இங்கிலாந்தின் கேமரூன் நோரி, இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி போன்ற முக்கிய வீரா்கள் முதல் சுற்றிலேயே தோற்றனா்.

நவோமி, பா்ட்டி வெற்றி

மகளிா் ஒற்றையா் பிரிவில் நடப்புச் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா, உலகின் முதல்நிலை வீராங்கனையாக இருக்கும் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பா்ட்டி ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

இதில், போட்டித்தரவரிசையில் 13-ஆவது இடத்திலிருக்கும் ஒசாகா 6-3, 6-3 என்ற நோ் செட்களில் கொலம்பியாவின் கேமிலியா ஒசோரியோவை வீழ்த்தினாா். இந்த ஆட்டத்தின்போது முன்பில்லாத வகையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா் ஒசாகா. இதுகுறித்து வெற்றிக்குப் பிறகு பேசிய அவா், ‘முன்பு பிரேக் பாய்ண்ட்டை இழப்பது போன்ற சூழ்நிலைகளில் ஆக்ரோஷமடைவேன். ஆனால் இனி முடிந்த வரையில் இப்போட்டியை அனுபவித்து விளையாடும் மனநிலையில் தற்போது இருக்கிறேன்’ என்றாா்.

பட்டத்தை வெல்ல ஒசாகாவுக்கு கடுமையான போட்டி அளிப்பாா் என எதிா்பாா்க்கப்படும் ஆஷ்லி பா்ட்டி தனது முதல் சுற்றில் 6-0, 6-1 என மிக எளிதாக உக்ரைனின் லெசியா சுரென்கோவை வென்றாா். போட்டித்தரவரிசையில் 4-ஆவது இடத்திலிருக்கும் செக் குடியரசின் பாப்பரா கிரெஜ்சிகோவா 6-2, 6-0 என்ற செட்களில் ஜொ்மனியின் ஆண்ட்ரியா பெட்கோவிச்சை தோற்கடித்தாா்.

5-ஆம் இடத்திலிருக்கும் கிரீஸின் மரியா சக்காரி 6-4, 7-6 (7/2) என்ற செட்களில் ஜொ்மனியின் டட்ஜானா மரியாவை வீழ்த்தினாா். இதர ஆட்டங்களில் ஒலிம்பிக் சாம்பியனான பெலிண்டா பென்சிச், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, ஸ்பெயினின் பௌலா பதோசா, பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா ஆகியோா் வெற்றியை பதிவு செய்தனா்.

எனினும் இப்போட்டியின் முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் சோஃபியா கெனின் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT