செய்திகள்

மே.இ. தீவுகள் - அயர்லாந்து டி20 தொடர் ரத்து

12th Jan 2022 05:38 PM

ADVERTISEMENT

 

கரோனாவால் சில வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேற்கிந்தியத் தீவுகள் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை மே.இ. தீவுகள் அணி வென்றது. 2-வது ஒருநாள் ஆட்டம் ஜமைக்காவில் செவ்வாய் அன்று நடைபெறுவதாக இருந்தது.

ஏற்கெனவே இரு அயர்லாந்து வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு முதல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாடாத நிலையில் மேலும் மூன்று அயர்லாந்து வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில் இருவர் முதல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார்கள். மேலும் இரு அயர்லாந்து வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டதால் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் வீரர்களைத் தேர்வு செய்வதில் அயர்லாந்து அணிக்குச் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து 2-வது ஒருநாள் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் ஒருநாள், டி20 தொடர்களைத் தொடர்ந்து நடத்துவது தொடர்பாக இரு அணி கிரிக்கெட் வாரியங்களும் கலந்து பேசி முடிவெடுத்துள்ளன.

அதன்படி 2-வது ஒருநாள் ஆட்டம் வியாழன் அன்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளன. இதையடுத்து ஞாயிறன்று நடைபெறுவதாக இருந்த மேற்கிந்தியத் தீவுகள் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சமீபத்தில் அமெரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட அமெரிக்காவுக்குச் சென்றது அயர்லாந்து அணி. அப்போது அயர்லாந்து அணியின் பணியாளர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இரு ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இரு அணிகளும் 1-1 என சமன் செய்தன.

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு ஜனவரி 22 முதல் பார்படாஸில் இங்கிலாந்துடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் மே.இ. தீவுகள் அணி பங்கேற்கிறது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT