செய்திகள்

கரோனாவால் பாதிக்கப்பட்ட பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேனா?: ஜோகோவிச் விளக்கம்

12th Jan 2022 12:06 PM

ADVERTISEMENT

 

கரோனாவால் பாதிக்கப்பட்டபோது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது பற்றிய தனது விளக்கத்தை நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச் அளித்துள்ளார்.

டென்னிஸ் விளையாட்டில் ஒரு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியாக இருக்கும் ஆஸ்திரேலிய ஓபன், வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. கடந்த வருடம் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் ஜோகோவிச் வென்றார். ஆடவா் ஒற்றையரில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை 9 முறை வென்றதோடு நடப்பு சாம்பியனாகவும் உள்ளார். 

இந்த ஆண்டு கரோனா சூழலில் போட்டி நடைபெறுவதால், அதில் பங்கேற்க வரும் போட்டியாளா்கள் கரோனா தடுப்பூசி முழுமையாகச் செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயம் என ஆஸ்திரேலிய ஓபன் போட்டி நிா்வாகம், போட்டி நடைபெறும் விக்டோரிய மாகாண அரசு அறிவித்தது. இதனால், தடுப்பூசி விவகாரத்தில் தயக்கம் காட்டி வரும் ஜோகோவிச் போட்டியில் பங்கேற்பது குறித்து சந்தேகம் நிலவியது.

ADVERTISEMENT

ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கும் வகையில், போட்டி நிா்வாகம் மற்றும் விக்டோரியா மாகாண அரசிடம் இருந்து தனக்கு ‘மருத்துவ ரீதியிலான விலக்கு’ கிடைத்திருப்பதாக கடந்த வாரம் ஜோகோவிச் அறிவித்தாா். தொடா்ந்து கடந்த புதன்கிழமை இரவு ஆஸ்திரேலியா வந்த அவரை, மெல்போா்ன் விமான நிலையத்திலேயே எல்லைக் காப்பு காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். விக்டோரியா மாகாண அரசு அளித்திருந்த விலக்கு செல்லுபடியாகக் கூடியதாக இல்லை என்று மத்திய அரசு கட்டுப்பாட்டில் வரும் அந்த அதிகாரிகள் அவரிடம் கூறினார்கள். அத்துடன் ஜோகோவிச்சின் நுழைவு இசைவும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜோகோவிச் தரப்பில் அவசரகால அடிப்படையில் இணையவழி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மெல்போா்னில் உள்ள, ஆஸ்திரேலிய குடியேற்றத் துறையின் தடுப்புக் காவல் மையமாகச் செயல்படும் ஹோட்டலில் ஜோகோவிச் தங்க வைக்கப்பட்டாா். அவரது மேல்முறையீடு மீது விக்டோரியா மாகாணத்தின் மெல்போா்ன் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. 

முன்னதாக விசாரணையின்போது, கடந்த டிசம்பா் மாதம் ஜோகோவிச் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், தற்போது அவா் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வழங்க வேண்டியதில்லை என அவா் தரப்பு வழக்குரைஞா் வாதாடினாா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள 6 மாதம் அவகாசத்தை ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை வழங்கியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு அவா் அந்த வாதத்தை முன் வைத்தாா். உலகின் நம்பா் 1 டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்கும் வகையில், அந்நாட்டில் தங்குவதற்கு அனுமதி அளித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அத்துடன், அவரது நுழைவு இசைவை (விசா) ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசு உத்தரவையும் நீதிமன்றம் நீக்கம் செய்தது. 

இந்நிலையில் கடந்த மாதம் கரோனாவால் ஜோகோவிச் பாதிக்கப்பட்ட நிலையில் சில பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது பற்றிய சர்ச்சை உருவானது. கடந்த 14 நாள்களாக வேறு எங்கும் செல்லவில்லை என ஆஸ்திரேலிய அரசிடம் அவர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த இரு வாரக் காலத்தில் ஸ்பெயின், செர்பியாவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளது தெரியவந்துள்ளது. டிசம்பர் 16 அன்று கரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியாகியிருந்தாலும் டிசம்பர் 17 அன்று குழந்தைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இதையடுத்து தற்போது இந்தச் சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார் ஜோகோவிச். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

செர்பியாவின் பெல்கிரேடில் டிசம்பர் 14 அன்று கூடைப்பந்து விளையாட்டில் கலந்துகொண்டேன். அந்தப் போட்டிக்கு வந்திருந்த பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் எவ்வித அறிகுறிகளும் இல்லாத நிலையிலும் டிசம்பர் 16 அன்று ரேபிட் பரிசோதனை மேற்கொண்டேன். அதில் கரோனா இல்லை என்றே முடிவு வந்தது. அதே நாளில் முன்னெச்சரிக்கையாக பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டேன். அடுத்த நாள் குழந்தைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அந்நிகழ்ச்சிக்குச் செல்லும் முன்பு ரேபிட் பரிசோதனையில் கரோனா இல்லை என்றே முடிவு வந்தது. டிசம்பர் 17 அன்று பரிசோதனையின் முடிவு தெரிந்தது. பிறகு எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டேன். ஒரே ஒரு பேட்டிக்கு மட்டும் ஒப்புக்கொண்டேன். பத்திரிகையாளருக்கு ஏமாற்றம் தர விரும்பவில்லை. எனினும் சமூக இடைவெளியைப் பேட்டியின்போது கடைப்பிடித்தேன். புகைப்படம் எடுக்கும்போது தவிர அந்தப் பேட்டியின்போது முகக்கவசம் அணிந்திருந்தேன். பேட்டியை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று தேவையான காலத்துக்குத் தனிமைப்படுத்திக்கொண்டேன். அந்தப் பேட்டியில் கலந்துகொண்டது என் தவறு. அதை வேறொரு தேதிக்கு மாறியிருக்கவேண்டும். பயணம் பற்றிய ஆவணத்தை என்னுடைய பணியாளர் குழு தவறாக அளித்துவிட்டார்கள். நிர்வாக ரீதியாகத் தவறு செய்ததற்கு என்னுடைய ஏஜெண்ட் மன்னிப்பு கோரியுள்ளார். இது மனிதத் தவறு. வேண்டுமென்றே செய்ததில்லை. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய அரசிடம் கூடுதல் ஆவணத்தைச் சமர்ப்பித்துள்ளோம். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன் என்றார். 

Tags : Djokovic
ADVERTISEMENT
ADVERTISEMENT