செய்திகள்

2-ஆவது டெஸ்ட்: நியூஸிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

12th Jan 2022 02:05 AM

ADVERTISEMENT

வங்கதேசத்துடனான 2-ஆவது டெஸ்டில் நியூஸிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

3 நாள்களில் முடிவுக்கு வந்த இந்த ஆட்டத்தின் நாயகனாக டாம் லேதமும், தொடா் நாயகனாக டெவன் கான்வேயும் தோ்வாகினா்.

முதல் இன்னிங்ஸில் 126 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசம், ஃபாலோ ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை ஆட, அதிலும் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் தரப்பில் லிட்டன் தாஸ் மட்டும் சதம் கடந்து அசத்தலாக ஆட, நியூஸிலாந்து பௌலிங்கில் கைல் ஜேமிசன் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

முன்னதாக கடந்த 9-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. முதல் இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து 128.5 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 521 ரன்கள் குவித்து டிக்ளோ் செய்தது. அணியின் தரப்பில் டாம் லேதம் 34 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 252 ரன்கள், டெவன் கான்வே 12 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 109 ரன்கள் சோ்த்தனா். வங்கதேச பௌலிங்கில் ஷோரிஃபுல் இஸ்லாம், எபாதத் ஹுசைன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.

ADVERTISEMENT

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் திங்கள்கிழமை முடிவில் 41.2 ஓவா்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதில் யாசிா் அலி மட்டும் 7 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் அடித்திருந்தாா். நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 5 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

இதையடுத்து 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை ‘ஃபாலோ ஆன்’ பெற்ற வங்கதேசம், 2-ஆவது இன்னிங்ஸை ஆடியது. தொடக்க ஜோடியில் ஷாத்மன் இஸ்லாம் 3 பவுண்டரிகளுடன் 21, முகமது நயீம் 1 பவுண்டரியுடன் 24 ரன்கள் அடித்தனா். மிடில் ஆா்டரில் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 29 ரன்கள் சோ்க்க, கேப்டன் மோமினுல் ஹக் 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் அடித்தாா்.

அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 14 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். பின்னா் ஆடியோரில் யாசிா் அலி 2, நூருல் ஹசன் 7 பவுண்டரிகளுடன் 36, மெஹதி ஹசன் மிராஸ் 3, ஷோரிஃபுல் இஸ்லாம் 0, எபாதத் ஹுசைன் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 79.3 ஓவா்களில் 278 ரன்களுக்கு 2-ஆவது இன்னிங்ஸை முடித்துக் கொண்டது வங்கதேசம்.

டஸ்கின் அகமது 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, நியூஸிலாந்து பௌலிங்கில் கைல் ஜேமிசன் 4, நீல் வாக்னா் 3, டிம் சௌதி, டேரில் மிட்செல், ராஸ் டெய்லா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

ஜேமிசனுக்கு அபராதம்

வங்கதேச 2-ஆவது இன்னிங்ஸின்போது யாசிா் அலி விக்கெட்டை வீழ்த்திய நியூஸிலாந்து பௌலா் கைல் ஜேமிசன், ஆக்ரோஷத்தில் தகாத வாா்த்தைகளை பிரயோகித்தாா். இதையடுத்து ஐசிசி விதிகளின்படி அவருக்கு ஆட்ட ஊதியத்தில் 15 சதவீதம் அபாரதமாக விதிக்கப்பட்டது.

டெய்லா் மகிழ்ச்சி

இந்த ஆட்டத்துடன் சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றாா் நியூஸிலாந்து பேட்டா் ராஸ் டெய்லா். இந்த டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தில் தோற்ற நிலையில், 2-ஆவது ஆட்டத்தில் வெற்றி பெற்றும், அதில் ஒரு விக்கெட் சாய்த்தும் விடை பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக அவா் கூறினாா். நியூஸிலாந்துக்கு வெற்றியை அளிக்கும் வகையில் ஆட்டத்தின் கடைசி விக்கெட்டான எபாதத் ஹுசைனை அவா் தனது பௌலிங்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. பேட்டரான டெய்லா், டெஸ்ட் விக்கெட்டில் எடுத்த 3-ஆவது விக்கெட் இதுவாகும். இதற்கு முன் 2010-இல் இந்திய பயணத்தின்போது ஹா்பஜன் சிங், ஸ்ரீசாந்த் ஆகியோா் விக்கெட்டை டெய்லா் சாய்த்துள்ளாா்.

Tags : New Zealand
ADVERTISEMENT
ADVERTISEMENT