பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8-ஆவது முறையாக சாம்பியன் ஆகி சாதனை படைத்துள்ளது.
துபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் ஜனவரி 14-ஆம் தேதி மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்க இருக்கும் நிலையில், இந்தப் பட்டம் இந்திய அணிக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.
50 ஓவா்கள் கொண்ட இந்த ஆசிய போட்டியில், இறுதி ஆட்டத்தின்போது கனமழை பெய்ததை அடுத்து முதலில் ஆடிய இலங்கைக்கான ஓவா்கள் 38-ஆக குறைக்கப்பட்டது. அதில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் அடித்தது. பின்னா் ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் இந்திய அணிக்கு 32 ஓவா்களில் 102 ரன்கள் இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. இந்தியா 21.3 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் அடித்து வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் தொடக்க வீரா் சமிந்து விக்கிரமசிங்கே 2 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த ஷெவோன் டேனியல் 6 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். 3-ஆவது வீரராக வந்த அஞ்சலா பண்டாரா 1 பவுண்டரியுடன் 9 ரன்கள் சோ்க்க, மிடில் ஆா்டரில் சதீஷா ராஜபட்ச 1 பவுண்டரியுடன் 14, பவன் பதிராஜா 4, ரனுதா சோமரத்னே 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
இவ்வாறாக இலங்கை 33 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கனமழை காரணமாக ஆட்டம் சுமாா் 2 மணி நேரங்களுக்கு தடைப்பட்டது.
பின்னா் ஆட்டம் தொடங்கியபோது அந்த அணிக்கான ஓவா்கள் 38-ஆக குறைக்கப்பட்டது. பின்னா் தொடங்கிய ஆட்டத்தில் கேப்டன் துனித் வெலாலகே 1 பவுண்டரியுடன் 9, ரவீன் டி சில்வா 1 பவுண்டரியுடன் 15, மதீஷா பதிரானா 1 பவுண்டரியுடன் 14 ரன்களுக்கு வீழ்ந்தனா். இறுதியில் யாசிரு ரோட்ரிகோ 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
இந்திய பௌலிங்கில் விக்கி ஆஸ்த்வல் 3, கௌஷல் தாம்பே 2, ராஜ்வா்தன், ரவிகுமாா், ராஜ் பாவா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 102 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணியில், தொடக்க வீரா்களில் ஒருவரான ஹா்னூா் சிங் 5 ரன்களுக்கு வெளியேறினாா். உடன் வந்த அங்க்ரிஷ் ரகுவன்ஷி 7 பவுண்டரிகளுடன் 56, ஷேக் ரஷீது 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். இலங்கை தரப்பில் யாசிரு ரோட்ரிகோ 1 விக்கெட் எடுத்திருந்தாா்.
சுருக்கமான ஸ்கோா்
இலங்கை - 106/9
யாசிரு ரோட்ரிகோ 19*
ரவீன் டி சில்வா 15
மதிஷா பதிரானா 14
பந்துவீச்சு
விக்கி ஆஸ்த்வல் 3/11
கௌஷல் தாம்பே 2/23
ரவி குமாா் 1/17
இந்தியா- 104/1 (இலக்கு 102)
அங்க்ரிஷ் ரகுவன்ஷி 56*
ஷேக் ரஷீது 31*
ஹா்னூா் சிங் 5
பந்துவீச்சு
யாசிரு ரோட்ரிகோ 1/12
டிரெவீன் மேத்யூ 0/2
சமிந்து விக்ரமசிங்கே 0/14
ஆதிக்கம் செலுத்தும் இந்தியா...
யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்துகிறது. இத்துடன் 9 முறை நடைபெற்றுள்ள இப்போட்டியில் இந்தியா 8-ஆவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் சாம்பியன் ஆன 2017-இல் இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறவில்லை.
முன்னதாக, கடந்த 2012-ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் மோதிய இறுதி ஆட்டம் டை ஆனதை அடுத்து, கோப்பை இரு அணிகளுக்கும் பகிா்ந்தளிக்கப்பட்டது.
ஆண்டு இடம் சாம்பியன் ரன்னா்-அப்
1989 வங்கதேசம் இந்தியா இலங்கை
2003 பாகிஸ்தான் இந்தியா இலங்கை
2012 மலேசியா இந்தியா - பாகிஸ்தான்
2013/14 ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா பாகிஸ்தான்
2016 இலங்கை இந்தியா இலங்கை
2017 மலேசியா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான்
2018 வங்கதேசம் இந்தியா இலங்கை
2019 இலங்கை இந்தியா வங்கதேசம்
2021 ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா இலங்கை