செய்திகள்

ஆர்ச்சர் பந்துவீச்சை எதிர்கொள்ள விருப்பம்: யாஷ் துல்

23rd Feb 2022 05:30 PM

ADVERTISEMENT

 

சமீபத்தில் யு-19 உலகக் கோப்பைப் போட்டியை வென்ற இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய தில்லி வீரர் யாஷ் துல், தமிழகத்துக்கு எதிரான அறிமுக ரஞ்சி ஆட்டத்தில் இரு சதங்கள் அடித்து அசத்தினார். ஐபிஎல் ஏலத்தில் தில்லி அணி ரூ. 50 லட்சத்துக்கு தேர்வு செய்தது.

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு யாஷ் துல் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஐபிஎல் ஏலத்தில் தில்லி அணி என்னைத் தேர்வு செய்யும் என எதிர்பார்த்தேன். ஏனெனில் அவர்களுடைய அகாதெமியில் நானும் பங்கேற்றுள்ளேன். ரிக்கி பாண்டிங்கைச் சந்தித்து அவருடைய வழிகாட்டலில் விளையாட ஆர்வமாக உள்ளேன். ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை எதிர்கொள்ள விருப்பம் உள்ளது. அவர் மிகவும் வேகமாகப் பந்துவீசுவார். ஐபிஎல் போட்டியில் தில்லி அணிக்காக வார்னருடன் இணைந்து விளையாடினால் நன்றாக இருக்கும். 

ADVERTISEMENT

யு-19 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டத்துக்கு முன்பு விராட் கோலி எங்களிடம் பேசியது ஊக்கமாக இருந்தது. எங்கள் குழுவில் விவிஎஸ் லக்‌ஷ்மண் சார் இருந்தது எங்களுக்கு பலன் அளித்தது. அவர் பகிர்ந்த அனுபவங்கள், ஆட்டத்தில் எங்களுக்கு உதவியாக இருந்தன. ரஞ்சி கோப்பைப் போட்டியில் நான் தொடக்க வீரராகக் களமிறங்க வேண்டும் என்று சொன்னபோது அதற்கேற்றாற்போல என் மனநிலையை மாற்றிக்கொண்டு விட்டேன். என் திறமை மீது நம்பிக்கை இருந்தது என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT