செய்திகள்

இந்திய அணியின் எதிர்காலம்: கேப்டன் மிதாலி ராஜ் பாராட்டும் வீராங்கனை யார்?

22nd Feb 2022 04:36 PM

ADVERTISEMENT

 

இளம் வீராங்கனை ரிச்சா கோஷ், இந்திய அணியின் எதிர்காலம் என கேப்டன் மிதாலி ராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டி20, 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய மகளிர் அணி. டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை 62 ரன்கள் வித்தியாசத்திலும் 3 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது ஒருநாள் ஆட்டத்தையும் வென்றது நியூசிலாந்து அணி. 3-வது ஒருநாள் ஆட்டத்தை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து அணி. 

4-வது ஒருநாள் ஆட்டம் குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மந்தனா இடம்பெற்றார்.

ADVERTISEMENT

இத்தொடரில் சிறப்பாக விளையாடி வரும் நியூசி. வீராங்கனை அமீலியா கெர் இன்றைய ஆட்டத்தில் 33 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஏமி 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. நியூசிலாந்தின் வலுவான ஸ்கோரால் இந்திய அணி இந்த ஆட்டத்தை வெல்ல மிகவும் போராடவேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்திய அணியில் ரிச்சா கோஷ் மட்டும் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அரை சதம் எடுத்த இந்திய வீராங்கனை என்கிற பெருமையை அடைந்துள்ளார். கேப்டன் மிதாலி 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணி, 17.5 ஓவர்களில் 128 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பேட்டிங்கில் அசத்திய அமீலியா கெர், 2 அற்புதமான கேட்சுகளைப் பிடித்ததோடு ஒரு ஓவரில் மூன்று விக்கெட்டுகளை எடுத்தும் அசத்தினார். 

5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி, 4-0 என முன்னிலை பெற்றுள்ளது. கடைசி ஆட்டம் பிப்ரவரி 24 அன்று நடைபெறுகிறது. 

இந்நிலையில் 4-வது ஒருநாள் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் கூறியதாவது:

ரிச்சா கோஷின் ஷாட்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் மிகவும் திறமைசாலி. இந்திய அணியின் எதிர்காலம். 

இந்திய அணியின் பந்துவீச்சில் சில கூட்டணிகளை முயற்சி செய்து பார்க்கிறோம். உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணியின் பந்துவீச்சு தான் ஓரளவு கவலையை அளிக்கிறது. எங்களுடைய முக்கியமான பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீச வேண்டும் என விரும்புகிறோம். மைதானத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்றாற்போல எங்களை மாற்றிக் கொண்டிருக்கிறோம். சிலசமயங்களில் பந்துவீச்சாளர்கள் திறமையைப் பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால் தொடர்ச்சியாக நன்குப் பந்துவீசவில்லை. இதைச் சரி செய்ய வேண்டும் என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT