செய்திகள்

ஒரே ஓவரில் கோலி, ரோஹித் சர்மாவை மீண்டும் வீழ்த்திய அல்ஸாரி ஜோசப்

11th Feb 2022 03:04 PM

ADVERTISEMENT

 

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-வது முறையாக ரோஹித் சர்மா, விராட் கோலியை ஒரே ஓவரில் வீழ்த்தியுள்ளார் மே.இ. வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப். 

மே.இ. தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இன்றுடன் ஒருநாள் தொடர் நிறைவுபெறுகிறது. டி20 தொடர் பிப்ரவரி 16 அன்று தொடங்குகிறது. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறுகின்றன.

முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலும் வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி. 3-வது ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. ஒருநாள் தொடரை வென்ற காரணத்தால் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர், குல்தீப் யாதவ், தீபக் சஹார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். கே.எல். ராகுல், தீபக் ஹூடா, சஹால், ஷர்துல் தாக்குர் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. மே.இ. தீவுகள் அணியில் அகேல் ஹுசைனுக்குப் பதிலாக ஹேடன் வால்ஷ் இடம்பெற்றுள்ளார். பூரன் கேப்டனாக உள்ளார். 

ADVERTISEMENT

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தின் 4-வது ஓவரை வீசிய அல்ஸாரி ஜோசப், அதே ஓவரில் ரோஹித் சர்மாவை 13 ரன்களிலும் விராட் கோலியை ரன் எதுவும் எடுக்க விடாமலும் வீழ்த்தினார். இதனால் இந்திய அணி, 16 ரன்களுக்கு 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. 

இதுபோல் நடப்பது முதல்முறையல்ல. 

2-வது ஒருநாள் ஆட்டத்தில் ஒரே ஓவரில் ரிஷப் பந்த் 18 ரன்களிலும் கோலி 18 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். பந்துவீச்சாளர் ஓடியன் ஸ்மித்.

முதல் ஒருநாள் ஆட்டத்திலும் ஒரே ஓவரில் கோலி உள்பட இரு விக்கெட்டுகளை வீழ்த்தியது மே.இ. தீவுகள் அணி. 3-வது ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித், கோலியை ஒரே ஓவரில் வீழ்த்திய அல்ஸாரி ஜோசப் தான் அப்போதும் அசத்தினார். ரோஹித் சர்மா 60 ரன்களிலும் விராட் கோலி 8 ரன்களிலும் அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சில் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தார்கள்.

இந்த ஒருநாள் தொடரில் ஒரு ஓவரில் ஒரு விக்கெட் விழுந்தால் அதே ஓவரில் தன்னுடைய விக்கெட்டையும் பறிகொடுத்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளார் விராட் கோலி. 

Tags : Virat Kohli
ADVERTISEMENT
ADVERTISEMENT