செய்திகள்

முடிவுக்கு வருகிறதா ஆண்டர்சன், பிராட் சகாப்தம்?

9th Feb 2022 04:41 PM

ADVERTISEMENT


மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் மூத்த வீரர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் பிராட் ஆகியோர் சேர்க்கப்படாதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி அடுத்த மாதம் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 0-4 என படுதோல்வியடைந்ததையடுத்து, தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கிறிஸ் சில்வர்வுட் நீக்கப்பட்டார். பேட்டிங் பயிற்சியாளர் கிரஹாம் தோர்ப் பதவி விலகினார். இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஆஷ்லே கைல்ஸ் நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, இடைக்கால இயக்குநராக ஆண்ட்ரூ ஸ்டிராஸ் பொறுப்பேற்றார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இடைக்காலப் பயிற்சியாளராக துணைப் பயிற்சியாளர் பால் காலிங்க்வுட் நியமிக்கப்பட்டார்.

இங்கிலாந்து கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்ததால், அணித் தேர்விலும் பெரிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எவரும் எதிர்பாராத வகையிலான பெரிய மாற்றங்கள் இங்கிலாந்து அணியில் நிகழ்ந்துள்ளன.

ADVERTISEMENT

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு 16 வீரர்கள் அடங்கிய இங்கிலாந்து அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து மூத்த பந்துவீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட் பிராட் ஆகியோரது பெயர்கள் இடம்பெறவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் 640 விக்கெட்டுகளை வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளார் ஆண்டர்சன். ஸ்டுவர்ட் பிராட் 537 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிக்கஐபிஎல்: ஆமதாபாத் அணியின் பெயர் ‘குஜராத் டைட்டன்ஸ்’

ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் ஆண்டர்சன் 3 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 23.37. ஆஷஸில் ஸ்டுவர்ட் பிராடும் சிறப்பாகவே பந்துவீசியுள்ளார். அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரி 26.30.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது பேட்டிங். எனினும், பந்துவீச்சில் இந்தத் துணிச்சலான மாற்றத்தை இங்கிலாந்து கிரிக்கெட் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆண்டர்சன், பிராட் தவிர்த்து ஆஷஸ் தொடரில் விளையாடிய மேலும் 6 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டர்சன், பிராட் எதிர்காலம் குறித்து ஸ்டிராஸ் கூறியதாவது:

"ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட் பிராடைப் பொறுத்தவரை இங்கிலாந்து வீரர்களாக இது அவர்களுடைய முடிவல்ல. பந்துவீச்சில் திறன் உள்ள புதிய முகங்கள் மற்றும் ஏற்கெனவே விளையாடிய மற்ற வீரர்களுக்குக் கூடுதல் பொறுப்பை வழங்குவது முக்கியமானது என்பதை உணர்ந்து இதைச் செய்துள்ளோம்.

ஆண்டர்சன் மற்றும் பிராட் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு சேர்த்த தரம் மற்றும் அனுபவத்தை எவரும் சந்தேகிக்க முடியாது. இந்தப் பருவத்தில் நடைபெறவுள்ள தொடர்கள் மற்றும் அதற்குப் பிறகு வரவுள்ள தொடர்களில் இருவரும் சேர்க்கப்படுவது புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் நிரந்தர தலைமைப் பயிற்சியாளரின் முடிவைப் பொறுத்தது."

மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி:

ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஸாக் கிராலே, மேத்யூ ஃபிஷ்ஸர், பென் ஃபோக்ஸ், டேன் லாரன்ஸ், ஜேக் லீச், அலெக்ஸ் லீஸ், சகிப் மஹ்மூத், கிரெய்க் ஓவர்டன், மேத்யூ பார்கின்சன், ஆலி போப், ஆலி ராபின்சன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

ஆஷஸ் டெஸ்ட் தொடருக்குப் பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்ட 8 வீரர்கள்:

ஜேம்ஸ் ஆண்டர்சன், டோம் பெஸ், சாம் பில்லிங்ஸ், ஸ்டுவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஹசீப் ஹமீத் மற்றும் டேவிட் மலான்.

ADVERTISEMENT
ADVERTISEMENT