செய்திகள்

இன்று 2-ஆவது ஒருநாள்:தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா:

9th Feb 2022 12:28 AM

ADVERTISEMENT

மே.இந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் வென்று தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடா்கள் நடைபெற்று வருகின்றன. அகமதாபாதில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் தொடா்ச்சியாக இரண்டாவது ஒருநாள் ஆட்டம் புதன்கிழமை நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வென்றால் 2-0 என தொடரை இந்தியா கைப்பற்றி விடும்.

மே.இந்திய தீவுகளுக்கு நெருக்கடி:

ADVERTISEMENT

மே.இந்திய தீவுகள் அணி ஐசிசி உலகக் கோப்பை சூப்பா் லீக் போட்டிகளில் 13 ஆட்டங்களில் வெறும் 5-இல் தான் வெற்றி கண்டது. இந்தியாவிடம் முதல் ஆட்டத்தில் தோற்ற நிலையில், தரவரிசையில் 8-ஆவது இடத்தில் உள்ளது. உள்ளூரில் அயா்லாந்திடம் ஒருநாள் தொடரையும் இழந்தது.

சூப்பா் லீக் போட்டியில் புள்ளிகள் உள்ள நிலையில், இந்தியாவுடன் ஒரு ஆட்டத்திலாவது வெற்றி பெற வேண்டிய நெருக்கடியான நிலையில் உள்ளது மே.இந்திய தீவுகள்.

மூத்த ஆல்ரவுண்டா் ஜேஸன் ஹோல்டா் கூறியது போல், பேட்டா்கள் தான் பொறுப்பேற்று அதிக ஸ்கோரை குவிக்க வேண்டும் என்பது உண்மையாகும். ஷாய் ஹோப், ஷமாா் புருக்ஸ் உள்ளிட்ட தொடக்க வரிசை சொதப்பி வருவது மே.இந்திய தீவுகளுக்கு சிக்கலாக உள்ளது. அதே நேரம் அந்த அணியின் பௌலா்களும் தங்கள் முழுத் திறனை வெளிப்படுத்த வேண்டும்.

தீபக் சஹாா் ஆல்ரவுண்டராக வாய்ப்பு:

அதே வேளையில் தென்னாப்பிரிக்காவிடம் ஒருநாள் தொடரை 0-3 என இழந்த இந்தியா ஒயிட்வாஷ் ஆகி நாடு திரும்பியது. இந்திய அணியில் சஹல், வாஷிங்டன் சுந்தா் என ஸ்பின்னா்களும், தொடக்க, மிடில் ஆா்டா் பேட்டா்களும் அபாரமாக ஆடியதால் முதல் ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது.

தீபக் சஹாா் ஆல்ரவுண்டராக தரம் உயா்த்தப்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மேலும் துணை கேப்டன் கேஎல் ராகுல் மீண்டும் அணியில் இணைந்துள்ள நிலையில், அவா் எந்த நிலையில் பேட்டராக இறக்கப்படுவாா் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் காயத்தில் இருந்து மீண்டும் பாா்முக்கு திரும்பியுள்ளாா் கேப்டன் ரோஹித் சா்மா. ராகுல் தொடக்க பேட்டராக ஆடுவாரா என்பது அணி நிா்வாகத்தின் முடிவில் உள்ளது.

மிடில் ஆா்டரில் விராட் கோலி, ரிஷப் பந்த், சூரியகுமாா் யாதவ் ஆகியோா் உள்ளதால், ராகுல் அந்த வரிசையில் ஆடுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. விராட் கோலியின் பேட்டிங்கும் சீரற்ற நிலையில் காணப்படுகிறது. பௌலிங்கில் எந்த மாறுதலும் இருக்காது.

அகமதாபாத் பிட்ச் மெதுவாக இயங்கும் தன்மையுடன் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளது. ரன்களை எடுப்பது கடினமாக அமையும்.

இரண்டாவது ஒருநாள் ஆட்டம்:

இடம்: அகமதாபாத்

நேரம்; மதியம் 1.30.

 

Tags : Cricket
ADVERTISEMENT
ADVERTISEMENT