மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தின் நடுவே உலகக் கோப்பை வென்ற 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. கோப்பை வென்ற இந்திய அணி செவ்வாய்க்கிழமை காலை பெங்களூரு வந்தடைந்தது. பிறகு, இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறும் ஆமதாபாத் வந்தடைந்தனர்.
இதையும் படிக்க | பந்த் பரிசோதனையின் பாதிப்பா? இந்தியா 237 ரன்கள்
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்று வருகிறது. 19 வயதுக்குள்பட்ட இந்திய வீரர்கள், மைதானத்துக்கு வந்து ஒருநாள் ஆட்டத்தைப் பார்வையிட்டு வருகின்றனர். உடன் தலைமைப் பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனிட்கர் மற்றும் அணியின் உதவியாளர்களும் இருந்தனர். அணியுடன் மேற்கிந்தியத் தீவுகள் பயணித்த தேசிய கிரிக்கெட் அகாடெமி தலைவர் விவிஎஸ் லக்ஷ்மனும் இருந்தார். இதுதவிர பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, பொருளாளர் அருண் துமல் மற்றும் மாநில கிரிக்கெட் சங்க அதிகாரிகள் இருந்தனர்.
இந்த நிலையில், உலகக் கோப்பை வென்றதைப் பாராட்டும் விதமாக 19 வயதுக்குள்பட்ட இந்திய வீரர்கள் மைதானத்தில் கௌரவிக்கப்பட்டனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால், 19 வயதுக்குள்பட்ட வீரர்களை இவர்கள் சந்திக்கவில்லை.