செய்திகள்

அஞ்சலி: நிலவில் கால்பந்தாட...

30th Dec 2022 05:43 PM | மோகன ரூபன்

ADVERTISEMENT

ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவை உள்ளடக்கிய மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மக்கள் பலருக்கு உலகம் உருண்டை என்பது கூட தெரியாது. ஆனால் கால்பந்து உருண்டை வடிவமானது என்பது அவர்களுக்குத் தெரியும். 

அதுபோல, அவர்களில் பலருக்கு சொந்த நாட்டு அதிபரின் பெயர் கூட தெரியாது. ஆனால் பீலே என்கிற பெயரைத் தெரியும். அந்த அளவுக்கு ஒரு மந்திர வார்த்தை அது.

ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய கால்பந்துவீரர்களில் ஒருவர் மத்தியாஸ் சிந்த்தலர். (Mathias Sindaler). சிண்டி என்பது அவரது இன்னொரு செல்லப்பெயர். இசைக்கு எப்படி இசைமேதை மொசார்ட்டோ அப்படி, கால்பந்துக்கான மொசார்ட் இந்த சிண்டிதான் என்பார்கள்.

‘சிண்டி கால்களில் மூளை உள்ளவர். அந்தக் கால்கள் ஓடும்போது எதிர்பார்க்கவே முடியாத பல அற்புதங்களைச் செய்யும்’ என அல்பிரட் போல்கர் என்பவர் பாராட்டியிருக்கிறார். ‘கிராண்ட் மாஸ்டர் ஒருவர் சதுரங்கம் ஆடுவது போல மத்தியாஸ் சிந்த்தலர், கால்பந்தாடுவார்’ என்றுகூட சொல்வார்கள்.

ADVERTISEMENT

இந்த மத்தியாஸ் சிந்த்தலர், பீலேவுக்கு முன்னால் பிறந்த பிதாமகன். பீலேவுக்கு அவர் முன்னோடி. ஆனால், சிந்த்லரைக்கூட, ‘இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய பீலே’ என்றுதான் சொல்வார்கள். 

ஆம். அவ்வளவுதான். காலத்தை கி.மு.,கி.பி. என்று பிரிப்பது போல கால்பந்தாட்டத்தைப் பொறுத்தவரை எல்லாமே பீலேவுக்கு முன், பீலேவுக்கு பின்தான்.

பிரேசில் அணியில், பீலேவுக்கு முன்பிருந்த மிகப்பெரிய வீரர் லியோனிடாஸ் டா சில்வா. (Leonidas da Silva). கறுப்பு வைரம் என்று அவரது செல்லப்பெயர். ஆனால், கால்பந்தாட்ட களத்தில் பீலே எப்போது கால் பதித்தாரோ, அப்போதிருந்து ‘கறுப்பு வைரம்’ என்ற செல்லப் பெயர், பீலேவிடம் வந்து ஒட்டிக் கொண்டது. 

பீலேயின் அப்பா டோடினோவும் ஒரு தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்தான். மகன் பிறந்தபோது மகனுக்கு அவர் வைத்த பெயர் எட்சன் அராண்டெஸ் டோ நாசிமென்டோ. இதில், எட்சன் என்ற பெயர், புகழ்பெற்ற அறிவியல் அறிஞரான தாமஸ் ஆல்வா எடிசனின் நினைவாக சூட்டப்பட்ட பெயர்.

கணவர் டோடினோ கால்பந்து மூலம் பெரிதாக எதையும் சம்பாதிக்கவில்லை. அதனால், பீலேயின் அம்மா, பீலே கால்பந்து ஆடுவதை ஆரம்பத்தில் விரும்பவில்லை. மகனின் கால்பந்தாட்டத்தை அவர் ரசிக்கவோ, உற்சாகப்படுத்தவோ இல்லை.

இருந்தும் சிறந்த வீரராக உருவெடுத்தார் பீலே. பிரேசில் நாட்டின் சாண்டோஸ் அணியில் பீலே இணைந்தபோது அவருக்கு வயது 15! பிரேசில் தேசிய அணிக்காக அவர் ஆடியபோது அவரது வயது பதினாறு. 1958ஆம் ஆண்டு ஸ்வீடனில் நடந்த உலகக்கோப்பையில் பீலே பங்கேற்றபோது ‘ஒரு நட்சத்திரம் உதித்துவிட்டது’ என்பது அனைவருக்கும் புரிந்து விட்டது. அந்த உலகக் கோப்பைப் போட்டியில் பீலே ஆடியபோது அவருக்கு 17 வயது முடிந்து 249 நாட்கள் ஆகியிருந்தன. உலகக் கோப்பைப் போட்டி ஒன்றில் பங்கேற்ற மிக இளம் வயது வீரர் அப்போது பீலேதான்.

1958 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்வீடனை 5-2 என வீழ்த்தி பிரேசில், முதல்முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் பீலே 2 கோல்கள் அடித்திருந்தார்.

1962 உலகக்கோப்பைப் போட்டியில் தொடை தசை கிழிந்த காயம் காரணமாக பீலே தொடர்ந்து ஆட முடியவில்லை. இரண்டாவது போட்டியிலேயே அவர் விலகிக் கொண்டார். ஆனால் பிரேசில் அணி இறுதிப் போட்டிக்குப்போகவும், வெற்றி பெறவும் பீலே மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தார்.

இறுதிப்போட்டியில் பிரேசில் அணி, செக்கோஸ்லோவேகியாவை 3-1 என தோற்கடித்து உலகக் கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது. உருகுவே, இத்தாலி அணிகளுக்குப்பிறகு அடுத்தடுத்து இருமுறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை பிரேசில் பெற்றது.

1966 உலகக் கோப்பைப் போட்டியில் பிரேசில் சோபிக்கவில்லை. ஆனால், 1970ஆண்டு மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இத்தாலியை 4-1 என வீழ்த்தி பிரேசில் மூன்றாவது முறையாகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. 3 முறை வென்றதால் ஜூல்ஸ் ரிமெட் (Jules Rimet) கோப்பையை தானே வைத்துக் கொள்ளும் பெருமையையும் பிரேசில் பெற்றது. இப்படி பிரேசில் மூன்று முறை உலகக் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தவர் பீலே. 

1974ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் உலகக்கோப்பைப் போட்டி நடந்தபோது, பீலே, நல்ல உடல்தகுதியுடன்தான் இருந்தார். ஆனால், பிரேசில் நாட்டின் ராணுவ சர்வாதிகார ஆட்சியைக் கண்டித்து அவர் ஆடமறுத்து விட்டார். இதற்காக பிரேசில் ராணுவ ஆட்சியாளர்கள் பீலேவை மிரட்டிப் பணிய வைக்கப் பார்த்தனர். ஆனால் பீலே மசிந்து கொடுக்கவில்லை. கடைசிவரை தனது முடிவில் அவர் பிடிவாதமாக இருந்து விட்டார். 

‘பிரேசில் நாட்டில் 1964ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அப்படியானால் 1966, 1970 ஆம்  ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிகளில் நீங்கள் பங்கேற்றது ஏன்? பிரேசில் நாட்டில் ராணுவ ஆட்சி இருப்பது அப்போது உங்களுக்குத் தெரியாதா?’ என்ற கேள்வி பீலேவிடம் கேட்கப்பட்டது.

அப்போது, ‘நான் உலகம் அறியாதவனாக இருந்தேன். நாட்டில் அப்போது என்ன நடந்து கொண்டிருந்தது என்பது எனக்குத் தெரியாது’ என நேர்மையாகப் பதில் அளித்தார் பீலே. 

பீலே பங்கேற்காத பிரேசில் அணி அந்த உலகக்கோப்பை போட்டியில் நான்காம் இடத்தைப் பிடித்தது.

தாய்நாடான பிரேசிலின் தேசிய அணிக்காக 92 போட்டிகளில் ஆடி 77 கோல்களை அடித்தவர் பீலே. சாண்டோஸ் அணிக்காக 659 போட்டிகளில், 643 கோல்களை அடித்தவர் அவர். மொத்தமாக 1,363 போட்டிகளில் பீலே அடித்த கோல்கள் 1,279. இது உலகசாதனைப் புத்தகமான கின்னஸில் இடம்பிடித்துள்ளது. 93 முறை ஹாட்டிரிக் கோல்களை அடித்து சாதனை புரிந்தவர் பீலே.

பீலே, 100 மீட்டர் தொலைவை 11 நொடிகளில் ஓடிக்கடக்கக்கூடியவர். ஆறடி உயரம் வரை அவரால் ஓங்கல் (டால்பின்) போல துள்ள முடியும். அந்தரத்தில் பாய்ந்து வரும் கால்பந்தை தலையால் எதிர்கொள்ள எப்போதும் முதல் ஆளாக துள்ளுவார் பீலே. காரணம், மற்றவர்களை சற்று அதிகநேரம் அவரால் அந்தரத்தில் நிற்க முடியும்.

நவம்பர் 19ஆம்தேதி, ‘பீலே நாள்’ என சாண்டோஸ் அணியினரால் கொண்டாடப்படுவது வழக்கம். 1969ஆம் ஆண்டு அந்த நாளில்தான் தனது ஆயிரமாவது கோலை அடித்தார் பீலே. அந்த கோலை அடித்தபோது, அவரைப் பாராட்ட ஆடுகளத்துக்குள் பலநூறு ரசிகர்கள் புகுந்தததால் ஆட்டம் மீண்டும் தொடங்க அரைமணி நேரத்துக்கும் மேலாகியது. 

‘வெற்றி என்பது விபத்து அல்ல. அது கடின உழைப்பு’, ‘உலகில் எல்லாமே ஒருவகை விளையாட்டுதான்’, ‘வெற்றி கடினமாக இருந்தால்தான் அதனால் விளையும் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும்’ என்றெல்லாம் பொன்மொழிகள் சொன்னவர் பீலே.

‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்ற கவியரசரின் வரியைப்போல, ‘பீலே ஒருபோதும் இறக்க மாட்டான்’ என்றும் பீலே கூறிவந்திருக்கிறார்.

’எனது 80 ஆண்டு வரலாற்றில் நான் செய்யாத ஒன்றே ஒன்று நிலாவில் கால்பந்து ஆடாததுதான்’ என்பதுகூட பீலே உதிர்ந்த பொன்மொழிதான். 

ஒருவேளை இப்போது அவர் நிலவில் கால்பந்து விளையாட போய்விட்டாரோ என்னவோ?
 

ADVERTISEMENT
ADVERTISEMENT