தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 2-0 என முன்னிலை பெற்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இரு நாள்களில் தோல்வியடைந்தது. மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்த டெஸ்டிலும் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் மோசமாக பேட்டிங் செய்ததால் முதல் இன்னிங்ஸில் தெ.ஆ. அணி 68.4 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 100-வது டெஸ்டை விளையாடிய டேவிட் வார்னர், இரட்டைச் சதமெடுத்து அசத்தினார். 3-வது நாளில் சிறப்பாக விளையாடிய அலெக்ஸ் கேரி 111 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா பெரிய ஸ்கோரை எட்ட உதவினார். இது அவருடைய முதல் டெஸ்ட் சதம். வார்னர் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹெட் 51 ரன்களும் கிரீன் ஆட்டமிழக்காமல் 51 ரன்களும் எடுத்தார்கள். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 145 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நோர்கியா 3 விக்கெட்டுகளும் ரபாடா 2 விக்கெடுகளும் எடுத்தார்கள். முதல் இன்னிங்ஸில் ஆஸி. அணி 386 ரன்கள் முன்னிலை பெற்றது. 3-வது நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி, 7 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் 4-வது நாளில் 2-வது இன்னிங்ஸிலும் மோசமாக விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, 68.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பவுமா அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். லயன் 3 விக்கெட்டுகளும் போலண்ட் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். இரு பேட்டர்கள் ரன் அவுட் ஆனார்கள். ஒரு இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது டெஸ்டை வென்ற ஆஸ்திரேலிய அணி, 2-0 என முன்னிலை பெற்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது. டேவிட் வார்னர், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 2005-06-க்குப் பிறகு சொந்த மண்ணில் முதல்முறையாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸி. அணி வென்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இந்த வெற்றினால் மேலும் அதிகமாகியுள்ளது.