செய்திகள்

இதுவே கடைசி உலகக் கோப்பை: அறிவித்தார் மெஸ்ஸி

14th Dec 2022 12:34 PM

ADVERTISEMENT

 

கத்தார் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியே தனது கடைசி உலகக் கோப்பை எனப் பிரபல வீரர் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் குரோசியாவை 3-0 என வீழ்த்தி 6-வது முறையாக உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது ஆர்ஜென்டீனா. 34-வது நிமிடத்தில் பெனால்டி வழியாக முதல் கோலை அடித்து ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தார் மெஸ்ஸி.  2 கோல்களுக்குப் பிறகு மெஸ்ஸியின் உதவியால் ஆல்வரெஸ் மற்றொரு கோலடித்தார். 3-0 என அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது ஆர்ஜென்டீனா. 

மெஸ்ஸியின் ஆட்டத்தை இறுதிச்சுற்றிலும் காண வாய்ப்பு கிடைத்துள்ளதால் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

ADVERTISEMENT

2014 உலகக் கோப்பையில் இறுதிச்சுற்றில் ஆர்ஜென்டீனா தோற்றதால் இம்முறை தனது அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தரும் முனைப்பில் உள்ளார் 35 வயது மெஸ்ஸி. 

இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி 5 கோல்களை அடித்துள்ளார். உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தமாக 11 கோல்களை அடித்துள்ளார். உலகக் கோப்பையில் அதிக கோல்களை அடித்த ஆர்ஜென்டீனா வீரர் என்கிற பெருமையையும் பெற்றார். உலகக் கோப்பையில் 19 கோல்களில் அவருடைய பங்களிப்பு இருந்துள்ளது (11 கோல்கள், 8 உதவிகள்). உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ளார். பீலே 12 கோல்களுடன் 5-ம் இடத்தில் உள்ளார். 

இந்நிலையில் இதுவே தனது கடைசி உலகக் கோப்பை எனக் கூறியுள்ளார் மெஸ்ஸி. ஆர்ஜென்டீனா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மெஸ்ஸி கூறியதாவது:

இதைச் சாதித்ததில் மகிழ்ச்சியாக உள்ளேன். என்னுடைய உலகக் கோப்பைப் பயணத்தை இறுதிச்சுற்றில் விளையாடி முடிக்கிறேன். அடுத்த உலகக் கோப்பைக்கு பல வருடங்கள் உள்ளன. என்னால் அந்த உலகக் கோப்பையில் விளையாட முடியும் எனத் தோன்றவில்லை. உலகக் கோப்பைப் பயணத்தை இதுபோல முடிப்பது சிறந்ததாகும். ஆர்ஜென்டீனா அணி மீண்டும் உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடுகிறது. அனைவரும் இத்தருணத்தை அனுபவிக்க வேண்டும் என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT