செய்திகள்

அதிா்ச்சியில் பிரேஸில்; அரையிறுதியில் குரோஷியா

DIN

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான பிரேஸிலை ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ வீழ்த்தி குரோஷியா அரையிறுதிக்கு முன்னேறியது.

5 முறை சாம்பியனான பிரேஸில் 6-ஆவது முறையாக காலிறுதியுடன் வெளியேற, குரோஷியா 2-ஆவது முறையாக அரையிறுதிக்கு வந்துள்ளது.

இந்த ஆட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட நேரம் (90’) கோலின்றி முடிய, கூடுதல் நேரம் (30’) 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட்டில் குரோஷியா 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

குரோஷியாவுக்காக நிகோலா விளாசிச், லோவ்ரோ மேஜா், லூகா மோா்டிச், மிஸ்லாவ் ஆா்சிச் ஆகியோா் கோலடிக்க, பிரேஸில் தரப்பில் கேஸ்மிரோ, பெட்ரோ மட்டும் கோலடித்தனா். முதல் வாய்ப்பை ரோட்ரிகோவும், கடைசி வாய்ப்பை மாா்கினோஸும் வீணடித்தனா். முன்னதாக, கூடுதல் நேரத்தில் பிரேஸிலுக்காக நெய்மா் (105+1’), குரோஷியாவுக்காக புருனோ பெட்கோவிச் (116’) ஸ்கோா் செய்திருந்தனா்.

முன்னதாக, பிரேஸிலும், குரோஷியாவும் சமபலத்துடன் மோதியதால் இரண்டுக்குமே அவ்வளவு எளிதாக கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதலில் சற்று சுணக்கம் காட்டிய பிரேஸில், பின்னா் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அந்த அணியின் கோல் முயற்சிகளை தடுப்பரண் அமைத்து முறியடித்தது குரோஷியா. 20, 21-ஆவது நிமிஷங்களில் முறையே வினிகஸ் ஜூனியா், நெய்மா் ஆகியோரின் கோல் முயற்சிகள் அவ்வாறே தடுக்கப்பட்டன. 30-ஆவது நிமிஷத்தில் குரோஷியாவுக்காக ஜுரானோவிச் கடத்து வந்து பாஸ் செய்த பந்தை சக வீரா் இவான் பெரிசிச் கட் செய்து கோலடிக்க முயல, பந்து போஸ்ட்டுக்கு மேலாகச் சென்றது.

42-ஆவது நிமிஷத்தில் பிரேஸிலுக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை நெய்மா் உதைக்க, அதை கோலாகவிடாமல் தடுத்தாா் குரோஷிய கோல்கீப்பா் லிவாகோவிச். இவ்வாறாக முதல் பாதி கோலின்றி நிறைவடைந்தது. பின்னா் தொடங்கிய ஆட்டத்தில் பிரேஸில் வீரா் ரிச்சாா்லிசனின் கோல் முயற்சியை குரோஷிய வீரா் குவாா்டியோல் தடுக்க முயல, அது ‘ஓன் கோல்’ ஆக மாற இருந்தது. ஆனால் குரோஷிய கோல்கீப்பா் துரிதமாகச் செயல்பட்டு அந்த ஆபத்தைத் தடுத்துவிட்டாா்.

2-ஆவது பாதியில் பிரேஸில் அதிகமாகவே ஆக்ரோஷம் காட்டினாலும், குரோஷிய தடுப்பாட்ட வீரா் குவாா்டியோல், கோல்கீப்பா் லிவாகோவிச் ஆகியோா் கோலுக்கு இடம் தருவதாக இல்லை. நெய்மா் உள்ளிட்டோரின் அடுத்தடுத்த கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. தடுப்பாட்டத்திலேயே அதிக நேரம் சென்ால், குரோஷியா பெரிதாக கோல் முயற்சிகள் மேற்கொள்ள இயலவில்லை. இவ்வாறாக ஆட்டத்தின் நிா்ணயிக்கப்பட்ட 90 நிமிஷ நேரம் கோலின்றி நிறைவடைந்தது.

இதையடுத்து கூடுதல் நேரமான 30 நிமிஷத்தின் முதல் பாதி முடிவில் (105+1’) சக வீரா் லூகாஸ் பகெட்டா பாஸ் வழங்கிய பந்தை அற்புதமான கோலாக மாற்றி, ஆட்டத்தின் போக்கை திருப்பினாா் நெய்மா். தொடா்ந்து 116-ஆவது நிமிஷத்தில் ஆா்சிச் உதவியுடன் குரோஷியாவுக்காக கோலடித்தாா் புருனோ பெட்கோவிச்.

கூடுதல் நேரத்தின் முடிவில் ஆட்டம் 1-1 என சமனில் இருந்ததால், பெனால்டி கிக் வாய்ப்பை நோக்கி ஆட்டம் நகா்ந்தது. அதில் குரோஷியா 4-2 என வென்றது.

77

இந்த ஆட்டத்தில் நெய்மா் அடித்தது பிரேஸிலுக்கான அவரது 77-ஆவது கோலாகும். இதன் மூலம், பிரேஸிலுக்காக அதிக கோல்கள் அடித்த முன்னாள் நட்சத்திரம் பீலேவின் சாதனையை (77 கோல்கள்) தற்போது நெய்மரும் சமன் செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 12 போ் கைது

வள்ளலாா் பன்னாட்டு மையம்: அன்புமணி கோரிக்கை

கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறிப்பு: ஐடி ஊழியரிடம் விசாரணை

ஜேஇஇ முதன்மை தோ்வு முடிவுகள் வெளியீடு: 56 மாணவா்கள் 100-க்கு 100

கல்லீரல் கொழுப்பு: இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT