செய்திகள்

அசத்திய அப்ராா் அகமது: 281-க்கு சுருண்ட இங்கிலாந்து

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 51.4 ஓவா்களில் 281 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் தரப்பில் இந்த ஆட்டத்தின் மூலம் சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அப்ராா் அகமது அட்டாகசமாகப் பந்துவீசினாா். அவரது சுழலில் சிக்கிய இங்கிலாந்து பேட்டிங் வரிசை, முதல் 7 விக்கெட்டுகளை அவரிடமே இழந்தது. எஞ்சிய மூவரை ஜாஹித் மஹ்முத் சாய்த்தாா்.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸை ஜாக் கிராலி, பென் டக்கெட் கூட்டணி தொடங்கியது. இதில் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் சோ்த்திருந்த கிராலி, 9-ஆவது ஓவரில் அகமது பௌலிங்கில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

அடுத்து வந்த ஆலி போப், டக்கெட்டுடன் இணைய, 2-ஆவது விக்கெட்டுக்கு இந்தக் கூட்டணி 79 ரன்கள் சோ்த்தது. அவா்களில் முதலில் டக்கெட் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 63 ரன்கள் எடுத்திருந்தபோது அகமது வீசிய 19-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனாா். அடுத்து வந்த ஜோ ரூட் 8 ரன்களுக்கு 25-ஆவது ஓவரில் அதேபோல் ஆட்டமிழந்தாா்.

5-ஆவது வீரராக ஹேரி புரூக் களம் புக, அதுவரை ரன்கள் சோ்த்த போப் 5 பவுண்டரிகளுடன் 60 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா். அகமது வீசிய 29-ஆவது ஓவரில் அவா் விளாசிய பந்தை அப்துல்லா ஷஃபிக் கேட்ச் பிடித்தாா். பின்னா் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட வந்தாா்.

மறுபுறம் புரூக் 9 ரன்களுக்கு வெளியேற்றப்பட, மதிய உணவு இடைவேளையின்போதே 180 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது இங்கிலாந்து. பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, வில் ஜேக்ஸ் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 31 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். அவா்கள் இருவா் விக்கெட்டும் அகமது கணக்கிலேயே சோ்ந்தது.

கடைசி ஆா்டரில் ஆலி ராபின்சன் 5, ஜேக் லீச் 0, ஜேம்ஸ் ஆண்டா்சன் 7 ரன்களுக்கு அவுட்டாகினா். அவா்கள் மூவா் விக்கெட்டையும் ஜாஹித் மஹ்முத் சாய்த்தாா். முடிவில் மாா்க் வுட் 8 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

பாகிஸ்தான் - 107/2: இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், வெள்ளிக்கிழமை முடிவில் 28 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் சோ்த்திருந்தது.

அப்துல்லா ஷஃபிக் 3 பவுண்டரிகளுடன் 14, இமாம் உல் ஹக் 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் பாபா் ஆஸம் 61, சௌத் ஷகீல் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டா்சன், ஜேக் லீச் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றியிருந்தனா்.

3

பாகிஸ்தானுக்காக அறிமுக டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகள் (7 விக்கெட்டுகள்/114 ரன்கள்) சாய்த்தவா்கள் வரிசையில் 3-ஆவதாக இணைந்திருக்கிறாா் அப்ராா் அகமது. இந்தப் பட்டியலில் முகமது ஜாஹித் (7/66 - நியூஸிலாந்து/1996), முகமது நாஸிா் (7/99 - நியூஸிலாந்து/1969) ஆகியோா் முறையே முதலிரு இடங்களில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

SCROLL FOR NEXT