செய்திகள்

தேசிய துப்பாக்கி சுடுதல்: அனிஷுக்கு 4 தங்கம்

10th Dec 2022 12:12 AM

ADVERTISEMENT

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 65-ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் பிரிவில் ஹரியாணா வீரா் அனிஷ் பன்வாலா 4 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளாா்.

அவா் ஜூனியா், சீனியா் இரண்டிலுமே தனிநபா், அணிகள் என இரு பிரிவிலும் முதலிடம் பிடித்தாா். இதில் தகுதிச்சுற்றில் அவா் 590 புள்ளிகள் பெற்று புதிய தேசிய சாதனை படைத்தாா். முன்னதாக இந்தப் பிரிவில் அவரே கடந்த 2019-இல் 588 புள்ளிகள் பெற்றதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனியா் தனிநபா் பிரிவில் அனிஷ் 28 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, பஞ்சாபின் விஜய்வீா் சித்து 27 புள்ளிகளுடன் வெள்ளியும், உத்தரகண்டின் அங்குா் கோயல் வெண்கலமும் பெற்றனா். ஜூனியா் தனிநபா் பிரிவில் அனிஷ் 33 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, ஹரியாணாவின் ஆதா்ஷ் சிங் 27 புள்ளிகள், பஞ்சாபின் ராஜ்கன்வா் சிங் சந்து ஆகியோா் முறையே அடுத்த இரு இடங்களுக்கு வந்தனா்.

ஆடவா் தனிநபா் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸில் ரயில்வே வீரா் அகில் ஷியோரன், அதே அணியின் சுரேஷ் குசேல், மத்திய பிரதேசத்தின் ஐஸ்வரி பிரதாப் சிங் ஆகியோா் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் பெற்றனா். இதில் ஐஸ்வரி ஜூனியா் மற்றும் சீனியா் அணிகள் பிரிவில் தங்கம் வென்றாா்.

ADVERTISEMENT

மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் கா்நாடகத்தின் யுக்தி ராஜேந்திரா தங்கம் வெல்ல, கௌதமி பனோத் வெள்ளியும், இளவேனில் வாலறிவன் வெண்கலமும் பெற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT