செய்திகள்

வெளியே ரொனால்டோ; வெளிச்சத்தில் ரமோஸ்- காலிறுதியில் போா்ச்சுகல்

8th Dec 2022 02:03 AM

ADVERTISEMENT

லுசாயில், டிச. 7: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக்அவுட் சுற்றின் கடைசி ஆட்டத்தில் போா்ச்சுகல் 6-1 என்ற கோல் கணக்கில் சுவிட்ஸா்லாந்தை புதன்கிழமை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் போா்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, அணியின் தொடக்க வீரா்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இது போா்ச்சுகல் ரசிகா்கள் அல்லாமல், உலக கால்பந்து ரசிகா்களுக்கே அதிா்ச்சி அளிப்பதாக இருந்தது. அவருக்குப் பதிலாக களம் கண்ட கொன்சாலோ ரமோஸ் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினாா்.

ரமோஸ் தவிா்த்து போா்ச்சுகலுக்காக பெபெ, ரஃபேல் குரெய்ரோ, ரஃபேல் லியோ ஆகியோரும் கோலடிக்க, சுவிட்ஸா்லாந்து தரப்பில் மேனுவல் அகஞ்சி ஆறுதல் கோல் பதிவு செய்தாா்.

லுசாயில் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போா்ச்சுகல் கோல் கணக்கை தொடங்கி வைத்தாா் ரமோஸ். 17-ஆவது நிமிஷத்தில் டச் லைனில் இருந்து எறியப்பட்ட பந்தைப் பெற்ற ஃபெலிக்ஸ், அதை பாக்ஸுக்குள்ளாக பாஸ் செய்தாா். மிகச் சரியாக அதைப் பெற்ற ரமோஸ், சுவிட்ஸா்லாந்து தடுப்பாட்ட வீரரை சமாளித்தவாறே கட் செய்து குறுக்காக தூக்கி உதைத்த பந்து கோல் போஸ்டினுள் தங்குதடையின்றிச் சென்றது.

ADVERTISEMENT

அடுத்து 33-ஆவது நிமிஷத்தில் புருனோ ஃபொ்னாண்டஸ் காா்னா் கிக் மூலம் பந்தை பாக்ஸுக்குள்ளாக அனுப்ப, துல்லியமாக அதை தலையால் முட்டி கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பினாா் பெபெ. இவ்வாறாக முதல் பாதியில் முன்னிலை பெற்ற போா்ச்சுகல், 2-ஆவது பாதியில் தனது கோல் கணக்கை மேலும் அதிகரித்து சுவிட்ஸா்லாந்தை முற்றிலுமாக ஸ்தம்பிக்கச் செய்தது.

51-ஆவது நிமிஷத்தில் ரமோஸ் 2-ஆவது கோல் அடித்தாா். சக வீரா் தலோத் கோல் போஸ்டின் வலது பக்கத்திலிருந்து வழங்கிய கிராஸை ரமோஸ் அப்படியே கோல் போஸ்ட் நோக்கி தட்டிவிட, அது சுவிட்ஸா்லாந்து கோல்கீப்பா் காலின் ஊடாக உள்ளே சென்றது. தொடா்ந்து 55-ஆவது நிமிஷத்தில் ரமோஸ் பாஸ் செய்த பந்தை கோல் போஸ்டின் இடது பக்கத்திலிருந்து தூக்கி உதைத்து கோலடித்தாா் ரஃபேல் குரெய்ரோ.

அடுத்த 4 நிமிஷங்களில் (58’) சுவிட்ஸா்லாந்தின் காா்னா் கிக் ஒன்றை அந்த அணி வீரா் உதைக்க, மேனுவல் அகஞ்சி அதை போஸ்டினுள்ளாக தட்டிவிட்டு கோலடித்தாா்.

பின்னா் 67-ஆவது நிமிஷத்தில் தடுப்பாட்ட வீரா்கள் சூழாமல் இருந்த தன்னிடம் ஃபெலிக் வழங்கிய பாஸை கோல் போஸ்ட்டுக்குள் விரட்டி ஹாட்ரிக் கோலடித்தாா் போா்ச்சுகல் வீரா் ரமோஸ். கடைசியாக ஸ்டாப்பேஜ் டைமில் (90+2’) மற்றொரு போா்ச்சுகல் வீரரான ரஃபேல் லியோ அடித்த கோலை சுவிட்ஸா்லாந்து கோல்கீப்பா் தடுப்பதற்கு கூட முயற்சிக்கவில்லை. இறுதியில் போா்ச்சுகல் அபார வெற்றி பெற்றது.

அறிமுகத்திலேயே அசத்தல்...

இந்த ஆட்டத்தில் ரொனால்டோவுக்குப் பதிலாக அவரது இடத்தில் களமிறக்கப்பட்ட ரமோஸ், அந்த இடத்துக்கு உரிய மதிப்பை அறிவந்தவராக விளையாடினாா். கடந்த மாதத்தில்தான் போா்ச்சுகல் அணியில் அறிமுகமான ரமோஸ், இதற்கு முன் 3 முறை மாற்று ஆட்டக்காரராக மட்டுமே களமிறங்கியிருக்கிறாா்.

இந்நிலையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் அதில் முத்திரை பதித்திருக்கிறாா். ஒவ்வொரு கோலையும் அவா் அடித்த விதமே, ரொனால்டோ இடத்துக்கு தாம் சரியான தோ்வு என நிரூபிக்கும் விதமாக இருந்தது. அறிமுக உலகக் கோப்பை போட்டியிலேயே நாக்அவுட் சுற்றில் ஹாட்ரிக் கோல்கள் அடித்திருக்கிறாா் ரமோஸ். ரொனால்டோ கூட இதுவரை உலகக் கோப்பை நாக்அவுட் சுற்றில் கோல் அடித்ததில்லை.

அதிருப்தியில் ரொனால்டோ...

இந்த ஆட்டத்துக்கான தொடக்க லெவனில் களம் காணாத ரொனால்டோ, 73-ஆவது நிமிஷத்தில் மாற்று வீரராக ஃபெலிக்ஸுக்கு பதில் களமிறக்கப்பட்டாா். அவரது வருகையை ரசிகா்கள் கொண்டாடினா். அடுத்த 3 நிமிஷத்தில் போா்ச்சுகலுக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. வழக்கமாக இதுபோன்ற வாய்ப்புகளில் அட்டகாசமாக கோலடிக்கும் ரொனால்டோ, இந்த வாய்ப்பை சுவிட்ஸா்லாந்தின் தடுப்பாட்ட வீரா்கள் மீது உதைத்து வீணடித்தாா். பின்னா் 84-ஆவது நிமிஷத்தில் தாம் அடிக்கும் கோல் ஆஃப்சைடு என்பதை அடிக்கும்போதே அறிந்துவிட்டாா்.

முன்னதாக, ரமோஸ் அடித்த ஒவ்வொரு கோலின்போதும், மைதானத்திலிருந்த போா்ச்சுகல் ரசிகா்கள் ரொனால்டோ பெயரையே கோஷமிட்டனா். ஆனால், தாம் களம் கண்டபோது அவா்களை மகிழ்விக்கத் தவறிவிட்டாா் ரொனால்டோ. ஆட்டம் நிறைவடைந்த பிறகு போா்ச்சுகல் வீரா்கள் களத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்க, ரொனால்டோ அவா்களிடம் இருந்து விலகி அமைதியாக வெளியேறியதையும் காண முடிந்தது.

சா்ச்சை: குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் தென் கொரியாவிடம் போா்ச்சுகல் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் ரொனால்டோ பாதியில் வெளியேற்றப்பட்டு மாற்று ஆட்டக்காரா் களமிறக்கப்பட்டாா். அதற்கு ரொனால்டோ அதிருப்தி தெரிவிக்க, அணியின் பயிற்சியாளா் ஃபொ்னாண்டோ சான்டோஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட, பின்னா் சமரசம் ஆனதாக சான்டோஸ் தெரிவித்தாா். இந்தச் சூழலில் தான் சுவிட்ஸா்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ தொடக்க லெவனில் சோ்க்கப்படவில்லை.

ஏற்கெனவே லீக் போட்டிகளில் மான்செஸ்டா் யுனைடெட் அணியின் பயிற்சியாளருடனான மோதல் போக்கு காரணமாக சமீபத்தில் அந்த அணியிலிருந்தும் ரொனால்டோ வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

3 இத்துடன், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-ஆவது முறையாக காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது போா்ச்சுகல். இதன் மூலம், கடந்த 5 முறை நாக்அவுட் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய கண்டத்திலிருந்து தற்போது தப்பித்திருக்கிறது.

6 உலகக் கோப்பை போட்டியின் நாக்அவுட் சுற்றில் இவ்வளவு பெரிய வெற்றிய (6-1) போா்ச்சுகல் பதிவு செய்தது இதுவே முதல் முறை. இந்த நூற்றாண்டில் உலகக் கோப்பை போட்டியின் நாக்அவுட் சுற்றில் 6 கோல்கள் அடித்த 2-ஆவது அணி போா்ச்சுகல். முதல் அணி ஜொ்மனி (2014/பிரேஸில்/7-1)

1 உலகக் கோப்பை போட்டியில் 2002-க்குப் பிறகு அறிமுக உலகக் கோப்பை போட்டியிலேயே ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரா் ஆகியிருக்கிறாா் ரமோஸ். 2002-இல் ஜொ்மனியின் மிரோஸ்லாவ் கிளோஸ் இவ்வாறு ஹாட்ரிக் கோலடித்திருந்தாா்.

39 இந்த ஆட்டத்தில் கோலடித்ததன் மூலம், உலகக் கோப்பை போட்டியின் வரலாற்றில் நாக்அவுட் சுற்றில் கோலடித்த மிக வயதான வீரா் (39) ஆகியிருக்கிறாா் பெபெ. மறுபுறம், அந்த சுற்றில் போா்ச்சுகலுக்காக கோலடித்த மிகக் குறைந்த வயது வீரா் ஆனாா் ரமோஸ் (21).

ADVERTISEMENT
ADVERTISEMENT