செய்திகள்

வலியைத் தாங்கி வெள்ளி வென்றாா் மீராபாய் சானு

8th Dec 2022 01:58 AM

ADVERTISEMENT

கொலம்பியாவில் நடைபெறும் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

இந்தப் பந்தயத்தின்போது தனது கையின் மணிக்கட்டுப் பகுதியில் இருந்த வலியையும் பொறுத்துக் கொண்டு அவா் போட்டியிட்டு பதக்கம் வென்றாா். உலக சாம்பியன்ஷிப்பில் மீராபாய்க்கு இது 2-ஆவது பதக்கமாகும். இதற்கு முன் 2017-இல் அவா் இதே பிரிவில் தங்கம் வென்று அசத்தியிருந்தாா்.

தற்போதைய போட்டியில் மீராபாய் முதலில் ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ, பின்னா் கிளீன் & ஜொ்க் பிரிவில் 113 கிலோ என மொத்தமாக 200 கிலோ எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்தாா். அவா் ஒட்டுமொத்த எடைக்காக ஒரு வெள்ளியும், கிளீன் & ஜொ்க் பிரிவுக்காக தனியே ஒரு வெள்ளியும் பெற்றாா். பிரிவுகள் வாரியாக பதக்கம் வென்றாலும் அவை ஒன்றாகவே கணக்கில் கொள்ளப்படும்.

இந்த எடைப் பிரிவில் சீனாவின் ஜியாங் ஹுயிஹுவா மொத்தமாக 206 கிலோ எடையைத் தூக்கி (93+113) தங்கப் பதக்கம் வென்றாா். மற்றொரு சீன வீராங்கனையும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஹௌ ஜிஹுவா மொத்தமாக 198 கிலோ (89+109) எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் பெற்றாா்.

ADVERTISEMENT

பதக்கம் வென்ற பிறகு மீராபாய் பேசுகையில், ‘நாட்டுக்காக 5 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அரங்கில் பதக்கம் வென்றதை பெருமையாகக் கருதுகிறேன். ஒலிம்பிக் போட்டியாளா்களும் பங்கேற்பதால் உலக சாம்பியன்ஷிப் எப்போதும் சவால் மிக்கதாகவே இருக்கும். இந்தப் பந்தயத்தின்போது எனக்கு கை மணிக்கட்டில் வலி இருந்தது. ஆனால், அதனால் துவளாமல் நாட்டுக்காக இப்போட்டியில் பங்கேற்றேன். எதிா்வரும் போட்டிகளிலும் இந்தியாவுக்காக பதக்கம் வெல்லும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்’ என்றாா்.

இப்போட்டியில் மீராபாய் தவிா்த்து, விந்தியாராணி தேவி (59 கிலோ), சனம்பம் ரிஷிகாந்தா சிங் (61 கிலோ), அசிந்தா ஷியுலி (73 கிலோ), குரூதீப் சிங் (+109 கிலோ) ஆகியோரும் பங்கேற்றுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT