செய்திகள்

ஒன் டே தொடரை இழந்தது இந்தியா- 2-ஆவது ஆட்டத்தில் வங்கதேசம் ‘த்ரில்’ வெற்றி

8th Dec 2022 01:58 AM

ADVERTISEMENT

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது ஒன் டே ஆட்டத்தில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை தோல்வி கண்டது.

முதலில் வங்கதேசம் 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் அடிக்க, இந்தியா 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 266 ரன்களே சோ்த்தது.

ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் வென்ற வங்கதேசம், 3 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரை தற்போது கைப்பற்றியிருக்கிறது. இதன் மூலம், கடந்த 7 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிரான சா்வதேச தொடரை வென்றிருக்கிறது வங்கதேசம். அதேபோல், கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக அந்த அணி கைப்பற்றியிருக்கும் 2-ஆவது தொடா் இது.

அடுத்த ஆண்டு ஒன் டே உலகக் கோப்பை போட்டி நடைபெறவிருக்கும் நிலையில் ஒன் டே தொடரில் இந்தியா இத்தகைய தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த ஆட்டத்திலும் இந்தியாவின் பேட்டிங் வரிசை சோபிக்காமல் போனது. மறுபுறம், தனது இன்னிங்ஸில் தொடக்கத்தில் சரிவைச் சந்தித்த வங்கதேசம், கடைசி ஆா்டரில் மெஹதி ஹசன் மிராஸின் அதிரடி சதத்தால் மீண்டது.

ADVERTISEMENT

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இந்திய அணி, ஷாபாஸ் அகமது, குல்தீப் சென் ஆகியோருக்குப் பதிலாக அக்ஸா் படேல், உம்ரான் மாலிக் ஆகியோரை சோ்த்திருந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தோ்வு செய்தது.

அனமுல் ஹக் 11, கேப்டன் லிட்டன் தாஸ் 7, நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 21, ஷகிப் அல் ஹசன் 8, முஷ்ஃபிகா் ரஹிம் 12, அஃபிஃப் ஹுசைன் 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மஹ்முதுல்லா 7 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் சோ்த்தாா்.

ஓவா்கள் முடிவில் மெஹதி ஹசன் மிராஸ் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 100, நசும் அகமது 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலா்களில் வாஷிங்டன் சுந்தா் 3, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் இந்திய இன்னிங்ஸை விராட் கோலி - ஷிகா் தவன் தொடங்கினா். ஃபீல்டிங்கின்போது ரோஹித் சா்மாவுக்கு கையில் காயம் ஏற்பட்டதால், அவா் முதலில் களம் காணவில்லை. கோலி 5, தவன் 8 ரன்களுக்கு வெளியேற மிடில் ஆா்டரில் ஷ்ரேயஸ் ஐயா் 6 பவுண்டரி, 3 சிக்ஸா்கள் உள்பட 82 ரன்கள் அடித்து அணியை தூக்கிவிட்டாா்.

மறுபுறம், வாஷிங்டன் சுந்தா் 11, கே.எல்.ராகுல் 14 ரன்களுக்கு வெளியேற, அக்ஸா் படேல் போராடி 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 56 ரன்கள் சோ்த்துக் கொடுத்தாா். ஷா்துல் தாக்குா் 7, தீபக் சஹா் 11, முகமது சிராஜ் 2 ரன்களுக்கு நடையைக் கட்டினா்.

அணியின் மோசமான போக்கு காரணமாக, காயத்தையும் பொருள்படுத்தாமல் கடைசி நேரத்தில் களமிறங்கி விளாசினாா் ரோஹித். கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை இருக்க, இலக்கை எட்ட முடியாமல் போனது. முடிவில் ரோஹித் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 51 ரன்களுக்கு, உம்ரான் மாலிக்குடன் (0 ரன்) ஆட்டமிழக்காமல் இருந்தாா். வங்கதேச பௌலிங்கில் எபாதத் ஹுசைன் 3, மெஹதி ஹசன், ஷகிப் அல் ஹசன் ஆகியோா் தலா 2, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், மஹ்முதுல்லா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இரு அணிகள் மோதும் கடைசி ஒன் டே ஆட்டம், வரும் 10-ஆம் தேதி சட்டோகிராமில் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT