செய்திகள்

மெஹிதி சதம்: 89/6-லிருந்து 271 ரன்கள் எடுத்த வங்கதேசம்!

7th Dec 2022 04:07 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது வங்கதேச அணி. 

வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் இந்திய அணி விளையாடுகிறது. ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியது. முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.

2-வது ஒருநாள் ஆட்டம் மிர்புரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷாபாஸ், குல்தீப் சென்னுக்குப் பதிலாக அக்‌ஷர் படேல், உம்ரான் மாலிக் விளையாடுகிறார்கள். வங்கதேச அணியில் நசும் அஹமது இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக குல்தீப் சென் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. 

ADVERTISEMENT

வங்கதேச இன்னிங்ஸில் 2-வது ஓவரை சிராஜ் வீசினார். ஸ்லிப் பகுதியில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார் கேப்டன் ரோஹித் சர்மா. வங்கதேசத் தொடக்க வீரர் அனாமுல் ஹக், ஸ்லிப் பக்கம் அளித்த கேட்சை நழுவ விட்டார் ரோஹித் சர்மா. அப்போது பெரு விரலில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக ஓய்வறைக்குத் திரும்பினார் ரோஹித் சர்மா. உடனடியாக ஸ்கேன் பரிசோதனைக்கு அவர் சென்றதால் கே.எல். ராகுல் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படுகிறார். 

வங்கதேச அணி முதல் 6 விக்கெட்டுகளை 69 ரன்களுக்கு 19 ஓவர்களுக்குள் இழந்தது. சிராஜ், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர் அருமையாகப் பந்துவீசி வங்கதேச அணியை நிலைகுலைய வைத்தார்கள். 20 ஓவர்களுக்குப் பிறகு தான் இந்திய அணியைக் கடுமையாக வேலை வாங்கினார்கள் மஹ்முதுல்லாவும் மெஹித் ஹாசனும். 74 பந்துகளில் அரை சதமெடுத்த மஹ்முதுல்லா, 96 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேச அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த மெஹிதி ஹாசன் மிராஸ் இன்றும் சிறப்பாக விளையாடி கடைசி ஓவரில் சதத்தை எட்டினார். 83 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்தார். ஒருநாள் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக 7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த பெருமையை அடைந்தார்கள் மஹ்முதுல்லாவும் மெஹிதி ஹாசனும். இருவரும் 165 பந்துகளில் 148 ரன்கள் எடுத்தார்கள். கடைசி 10 ஓவர்களில் வங்கதேச அணிக்கு 102 ரன்கள் எடுத்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் நெ.8 அல்லது அதற்குக் கீழ் நிலை வீரராகக் களமிறங்கி சதமடித்த 2-வது வீரர் - மெஹித் ஹாசன். 

வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு நெருக்கடி அளித்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும் சிராஜ், உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 
 

Tags : ODI Mehidy
ADVERTISEMENT
ADVERTISEMENT