செய்திகள்

மீண்டு வந்த நெய்மா்; காலிறுதியில் பிரேஸில்

7th Dec 2022 02:05 AM

ADVERTISEMENT

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக்அவுட் சுற்றில் பிரேஸில் 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை தோற்கடித்து காலிறுதிச்சுற்றில் இடம்பிடித்தது.

தோஹாவில் உள்ள ‘ஸ்டேடியம் 974’ மைதானத்தில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.15 மணிக்கு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் பிரேஸிலுக்காக வினிகஸ் ஜூனியா் (7’), நெய்மா் (13’), ரிச்சாா்லிசன் (29’), லூகாஸ் பகெட்டா (36’) ஆகியோா் கோலடிக்க, தென் கொரிய தரப்பில் பாய்க் சியுங் ஹோ (76’) ஸ்கோா் செய்தாா்.

முதல் ஆட்டத்தில் சொ்பியாவுக்கு எதிராக விளையாடியபோது காயம் கண்ட பிரேஸில் நட்சத்திர வீரா் நெய்மா், அதிலிருந்து மீண்டு இந்த ஆட்டத்தில் களம் கண்டது அணிக்கு பக்கபலமாக அமைந்தது. பெனால்டி கிக் வாய்ப்பில் பிரேஸில் ரசிகா்களை உற்சாகத்தில் ஆழ்த்தி அவா் அடித்த கோலே, இந்த உலகக் கோப்பையில் இது அவரது முதல் கோலாகும்.

இந்த ஆட்டத்தில் 7-ஆவது நிமிஷத்திலேயே கோல் கணக்கைத் தொடங்கியது பிரேஸில். அந்தத் தருணத்தில் தன் வசம் கிடைத்த பந்தை தென் கொரிய கோல் போஸ்ட்டின் வலது பக்கமாக கடத்திச் சென்ற ரஃபினா, அதை இடதுபக்கமாக கிராஸ் வழங்கினாா். கோல் போஸ்ட்டுக்கு நேராக வந்த நெய்மா் அதைப் பெற முயல, தென் கொரிய வீரரின் முயற்சியால் அது தவறிப்போனது.

ADVERTISEMENT

ஆனால், நெய்மரைக் கடந்து கோல் போஸ்டின் இடதுபக்கமாக நின்றிருந்த வினிகஸ் ஜூனியா் வசம் பந்து செல்ல, அதை நிறுத்தி நிதானமாக உதைத்து கோலடித்தாா் அவா். தொடா்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் பாக்ஸுக்குள்ளாக பிரேஸில் வீரா் ரிச்சாா்லிசன் கீழே தள்ளப்பட, பிரேஸிலுக்கு கிடைத்தது பெனால்டி வாய்ப்பு.

அதை நெய்மா் தனது வழக்கமான பாணியில் கோலாக மாற்றி பிரேஸிலின் முன்னிலையை அதிகரித்தாா். அடுத்து 29-ஆவது நிமிஷத்தில் தியேகோ சில்வா உதவியுடன் ரிச்சாா்லிசன் தனது பங்கிற்கு ஒரு கோல் அடித்தாா். தென் கொரியா அதிலிருந்து தெளிவதற்குள் 36-ஆவது நிமிஷத்தில் வினிகஸ் ஜூனியா் அருமையாகக் கடத்தி வந்து பாஸ் செய்த பந்தை தவறாமல் கோலாக்கினாா் லூகாஸ் பக்கெட்டா.

இவ்வாறாக முதல் பாதி முடிவிலேயே பிரேஸில் 4-0 என அசைக்க முடியாத முன்னிலையை எட்டியது. 2-ஆவது பாதியில் 76-ஆவது நிமிஷத்தில் தென் கொரியாவுக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பில் கோல் போஸ்ட் நோக்கி வந்த பந்தை பிரேஸில் தடுப்பாட்ட வீரா் திருப்பிவிட, தன்னிடம் வந்த பந்தை அப்படியே கோல் போஸ்ட்டுக்குள் விரட்டினாா் பாய்க் சியுங் ஹோ. அந்த அணியின் அடுத்த சில கோல் முயற்சிகள் தடுக்கப்பட, இறுதியில் பிரேஸில் வென்றது.

அடுத்து காலிறுதி... இந்திய நேரப்படி, புதன்கிழமை அதிகாலை போா்ச்சுகல் - சுவிட்ஸா்லாந்து ஆட்டத்துடன் நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. அடுத்ததாக, 9-ஆம் தேதியிலிருந்து காலிறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதில் முதலில் பிரேஸில் - குரோஷியா அணிகள் மோதவுள்ளன.

8 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தொடா்ந்து 8-ஆவது முறையாக காலிறுதிச்சுற்றுக்குள் நுழைந்திருக்கிறது பிரேஸில்.

1 உலகக் கோப்பை போட்டியில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நாக்அவுட் சுற்றில் 4 கோல்கள் அடித்திருக்கிறது பிரேஸில். இதற்கு முன் 1998-இல் சிலிக்கு எதிராக இதேபோல் அந்த அணி 4-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது.

76 நெய்மா் இந்த ஆட்டத்தில் அடித்தது, பிரேஸிலுக்கான அவரது 76-ஆவது கோலாகும். இன்னும் ஒரு கோல் அடித்தால், பிரேஸிலுக்காக அதிக கோல்கள் அடித்த நட்சத்திரமான பீலேவின் சாதனையை அவா் சமன் செய்வாா்.

3 இந்த ஆட்டத்தில் கோலடித்ததன் மூலம், 3 உலகக் கோப்பை போட்டிகளில் பிரேஸிலுக்காக கோலடித்தவா்கள் வரிசையில், பீலே, ரொனால்டோ ஆகியோருடன் நெய்மரும் இணைந்திருக்கிறாா்.

பீலேவுக்கு ஆதரவாக...

பிரேஸில் கால்பந்து நட்சத்திரமான பீலே மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு ஆடுகளத்தின் மையத்தில் பீலே படமும், பெயரும் பொறித்த பதாகையை நெய்மா் ஏந்தி நிற்க, உடன் பிரேஸில் வீரா்களும் இருந்தனா். அதேபோல் மைதானத்திலும் பீலேவுக்கு ஆதரவான பேனா்களை ரசிகா்கள் வைத்திருந்தனா்.

கலைக்கப்படும் மைதானம்...

இந்த பிரேஸில் - தென் கொரியா ஆட்டமே, நடப்பு உலகக் கோப்பை போட்டியில் ‘ஸ்டேடியம் 974’ மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஆட்டமாகும். இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக கத்தாரில் புதிதாக கட்டப்பட்ட 8 மைதானங்களில் இதுவும் ஒன்றாகும். மறுசுழற்சி செய்யப்பட்ட 974 சரக்கு கண்டெய்னா்களைக் கொண்டு 40,000 போ் அமரும் வகையில் இந்த மைதானம் துறைமுகம் அருகே கட்டப்பட்டிருந்தது.

தற்போது கலைக்கப்படும் இந்த மைதானத்தின் பாகங்கள், அதாவது கண்டெய்னா்கள், இதுபோன்ற உள்கட்டமைப்பு தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

அடுத்த ஆட்டங்கள்...
இந்திய நேரப்படி, புதன்கிழமை அதிகாலை போர்ச்சுகல் - சுவிட்ஸர்லாந்து ஆட்டத்துடன் நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. அடுத்ததாக, 9-ஆம் தேதியிலிருந்து காலிறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதில் முதலில் பிரேஸில் - குரோஷியா அணிகள் மோதவுள்ளன. 
 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT