செய்திகள்

இந்திய மகளிர் அணி பயிற்சியாளர் ரமேஷ் பவார் பணி மாற்றம்: பிசிசிஐ

6th Dec 2022 03:48 PM

ADVERTISEMENT

 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் வீரர் ரமேஷ் பவாரை நேஷனல் கிரிக்கெட் அகாதெமிக்கு பணி மாற்றம் செய்துள்ளது பிசிசிஐ. 

2018 முதல் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார் ரமேஷ் பவார். எனினும் நடுவில் இரண்டரை வருடங்களுக்கு மற்றொரு முன்னாள் வீரரான டபிள்யூ.வி. ராமன் பயிற்சியாளராகப் பணியாற்றினார். இதன்பிறகு 2021 மே மாதம் முதல் இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் பவார் நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாரை, பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமிக்கு பணி மாற்றம் செய்துள்ளது பிசிசிஐ. நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக ரமேஷ் பவார் பணியாற்றுவார் என அகாதெமியின் தலைவர் விவிஎஸ் லஷ்மன் கூறியுள்ளார். இந்திய அணிக்காக 2004 முதல் 2007 வரை 2 டெஸ்டுகள், 31 ஒருநாள் ஆட்டங்களில் ரமேஷ் பவார் விளையாடியுள்ளார்.     

ADVERTISEMENT

இதையடுத்து மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் கனிட்கர் நியமிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 9 முதல் மும்பையில் தொடங்கும் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து அவர் பணியாற்றுவார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT