செய்திகள்

செனகலை வீழ்த்தியது இங்கிலாந்து

6th Dec 2022 06:26 AM

ADVERTISEMENT

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக்அவுட் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் செனகலை சாய்த்து காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. வரும் 11-ஆம் தேதி அந்தச் சுற்றில், நடப்பு சாம்பியனான பிரான்ûஸ சந்திக்கிறது இங்கிலாந்து. 

இந்திய நேரப்படி, திங்கள்கிழமை அதிகாலை அல் கோர் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்துக்காக ஜோர்டான் ஹெண்டர்சன் (38'), ஹேரி கேன் (45+3'), புகாயோ சகா (57') ஆகியோர் கோலடித்தனர். 

விறுவிறுப்பாகத் தொடங்கிய இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் வாய்ப்புக்காக பரவலாக முயற்சித்தன. 23-ஆவது நிமிஷத்தில் செனகல் வீரர் இஸ்மாய்லா சார் கோல் வாய்ப்பை நெருங்கி வந்து உதைத்த பந்து போஸ்ட்டுக்கு மேலாகச் சென்றது. அடுத்து 31-ஆவது நிமிஷத்திலும் அந்த அணியின் பெüலாயே டியா அருமையான ஒரு கோல் முயற்சியை மேற்கொள்ள, இங்கிலாந்து கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்டின் கைகளில் பட்டு பந்து கோலாகாமல் போனது. 

இதையடுத்து இங்கிலாந்து தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. அதன் பலனாக 38-ஆவது நிமிஷத்தில் கோலடித்தது அந்த அணி. ஹேரி கேன் வழங்கிய பாûஸ ஜூட் பெலிங்கம் பெற்றுக் கொண்டு கோல் போஸ்டின் இடதுபுறமாகக் கடத்திச் சென்று செனகலின் சில தடுப்பாட்ட வீரர்களை தன்பக்கம் இழுத்தார். 

ADVERTISEMENT

பின்னர் தகுந்த இடம் பார்த்து கிராஸ் வழங்க, கோல் போஸ்ட்டுக்கு நேராக வந்த ஜோர்டான் ஹெண்டர்சன் அதை அப்படியே கோல் போஸ்ட்டுக்குள் தட்டிவிட்டார். அடுத்து ஸ்டாப்பேஜ் டைமில் (45+3') பெலிங்கம் கட்டுப்பாட்டில் வந்த பந்தை அவர் ஃபில் ஃபோடனுக்கு பாஸ் செய்ய, டிஃபெண்டர்கள் சூழாத நிலையில் இருந்த ஹேரி கேனிடம் அவர் கிராஸ் கொடுத்தார். அதைப் பெற்ற கேன், அருமையான கோலடித்தார். 

இவ்வாறாக முதல் பாதியிலேயே இங்கிலாந்து முன்னிலை பெற்றது. 2-ஆவது பாதியில் 56-ஆவது நிமிஷத்தில் கேனின் நேரடியான கோல் முயற்சியை செனகல் கோல்கீப்பர் எட்வர்ட் மெண்டி தடுத்தார். எனினும் அடுத்த நிமிஷத்தில் இங்கிலாந்து 3-ஆவது கோல் அடித்தது. 

அந்த நிமிஷம் ஹேரி கேன் கட்டுப்பாட்டில் இருந்த பந்தை அவர் தவறவிட, அதை தன் வசப்படுத்திய ஃபோடன், புகாயோ சகாவுக்கு கிராஸ் வழங்க, அதை அவர் துல்லியமான கோலாக்கினார். எஞ்சிய நேரத்தில் செனகலின் கோல் முயற்சிகள் பலிக்காமல் போக, இங்கிலாந்து வென்றது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT