செய்திகள்

காலிறுதிக்கு வந்தது குரோஷியா: பெனால்டி வாய்ப்பில் ஜப்பானை வென்றது

6th Dec 2022 06:02 AM

ADVERTISEMENT

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் குரோஷியா ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் ஜப்பானை வீழ்த்தி (3-1) காலிறுதிக்கு தகுதிபெற்றது.

இந்த ஆட்டம் முதலில் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவிலும், பின்னா் வழங்கப்பட்ட 30 நிமிஷ கூடுதல் நேரத்தின் முடிவிலும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலையில் நீடித்ததால், ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பை நோக்கி நகா்ந்தது. அதில் குரோஷியாவுக்காக நிகோலா விலாசிச், மாா்செலோ புரோஸோவிச், மேரியோ பசிலிச் ஆகியோா் கோலடிக்க, ஜப்பான் தரப்பில் டகுமா அசானோ மட்டும் ஸ்கோா் செய்தாா்.

முன்னதாக, இந்த ஆட்டத்தில் முதல் பாதியின் இறுதிக் கட்டத்தில் ஜப்பானுக்கு கோல் வாய்ப்பு கணிந்தது. 43-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்கு கிடைத்த காா்னா் கிக் வாய்ப்பை டோவான் கிராஸாக வழங்கினாா். அதை யோஷிடா தலையால் முட்டித் திருப்ப, தன்னிடம் வந்த பந்தை நேராக கோல் போஸ்ட்டுக்குள் விரட்டினாா் டாய்ஸென் மேடா.

இடைவேளைக்குப் பிறகு தொடா்ந்த 2-ஆவது பாதியில் குரோஷியா முனைப்பு காட்ட, அந்த அணிக்கும் கோல் வாய்ப்பு கிடைத்தது. 55-ஆவது நிமிஷத்தில் ஜப்பான் கோல் பாக்ஸுக்குள்ளாக குரோஷிய வீரா் லாவ்ரென் லேசாக தூக்கி உதைத்து கிராஸ் வழங்க, அதை தகுந்த முறையில் தலையால் முட்டி கோல் போஸ்ட்டுக்குள் தள்ளினாா் இவான் பெரிசிச்.

ADVERTISEMENT

இதையடுத்து முன்னிலை பெறுவதற்காக மீண்டும் இரு அணிகளும் அடுத்த கோல் வாய்ப்புக்கு முயற்சித்தன. எனினும், நிா்ணயிக்கப்பட்ட 90 நிமிஷங்கள் நிறைவில் முடிவு எட்டப்படவில்லை.

இதையடுத்து 5 நிமிஷ இடைவேளைக்குப் பிறகு கூடுதல் நேரம் 30 நிமிஷங்கள் அளிக்கப்பட, அதன் முடிவிலும் அந்த அணிகள் கூடுதல் கோல் அடிக்காததால், ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பை நோக்கி நகா்ந்தது. அதில் குரோஷியா வென்றது. உலகக் கோப்பை போட்டியில் இதற்கு முன் தான் கையாண்ட இரு பெனால்டி ஷூட் அவுட்’களிலுமே குரோஷியா வென்றுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் - குரோஷியா மோதிக் கொண்டது இது 3-ஆவது முறையாகும். முந்தைய 2 ஆட்டங்களில் ஒன்றில் குரோஷியா வென்றிருக்க, மற்றொரு ஆட்டம் கோலின்றி டிரா ஆகியிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT