செய்திகள்

இந்திய யு-19 அணியில் ஷஃபாலி வர்மா: கேள்விகளை எழுப்பும் பிசிசிஐயின் முடிவு!

5th Dec 2022 03:30 PM

ADVERTISEMENT

 

மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ் இடம்பெற்றிருப்பது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணிக்குப் பிரபல வீராங்கனை ஷஃபாலி வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிருக்கான யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டி முதல்முறையாக அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஜனவரி 14 முதல் ஜனவரி 29 நடைபெறவுள்ள இப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு இந்திய யு-19 மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவில் அந்நாட்டுக்கு எதிராக 5 டி20 ஆட்டங்களில் பங்கேற்கிறது. இத்தொடர் டிசம்பர் 27 முதல் ஜனவரி 4 வரை நடைபெறுகிறது. 

ADVERTISEMENT

இந்திய யு-19 அணிக்குப் பிரபல வீராங்கனை ஷஃபாலி வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மற்றொரு இந்திய மகளிர் அணி வீராங்கனையான ரிச்சா கோஷும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 10 முதல் தென்னாப்பிரிக்காவில் மகளிர் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால் அதற்காக ஷஃபாலி வர்மாவும் ரிச்சா கோஷும் இந்திய யு-19 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தென்னாப்பிரிக்காவில் ஏற்கெனவே விளையாடிய அனுபவத்துடன் டி20 உலகக் கோப்பையில் இருவரும் பங்கேற்க வேண்டும் என்பதே பிசிசிஐயின் திட்டமாக உள்ளது. 

 யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் டி பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் உள்ளன. 

18 வயது ஷஃபாலி வர்மா இந்திய அணிக்காக 46 டி20, 21 ஒருநாள், 2 டெஸ்டுகளிலும் 19 வயது ரிச்சா கோஷ் 25 டி20, 17 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்கள். 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களிலும் உலகக் கோப்பைப் போட்டிகளிலும் விளையாடிய இரு வீராங்கனைகளான ஷஃபாலி வர்மாவும் ரிச்சா கோஷும் இந்திய யு-19 அணியில் இடம்பெற்றது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. 

யு-19 உலகக் கோப்பையை வெல்வது முக்கியம் தான், அதேசமயம் ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷுக்குப் பதிலாகப் புதிதாக இரு வீராங்கனைகள் அணியில் இடம்பெற்றிருந்தால் புதிய திறமைகளுக்கு வாய்ப்பளித்தது போல் ஆகியிருக்கும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. யு-19 உலகக் கோப்பைக்கான பயிற்சி முகாமில் ஷஃபாலி வர்மா இடம்பெறவில்லை. இதனால் அவரால் அணி வீராங்கனைகளிடம் நன்குப் பழக முடியுமா, வீராங்கனைகளைப் பற்றி சரியாக அறியாமல் ஒரு நல்ல கேப்டனாகச் செயல்பட முடியுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இதற்கு முன்பு இந்திய யு-19 அணியின் கேப்டனாக இருந்த ஸ்வேதா ஷெராவத் நன்றாகச் செயல்பட்டார். அவரை துணை கேப்டனாக நியமனம் செய்ததற்குப் பதிலாக கேப்டனாகவே தேர்வு செய்திருக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

ஜனவரி 19 முதல் பிப்ரவரி 2 வரை தென்னாப்பிரிக்காவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளின் மகளிர் அணிகள் முத்தரப்புப் போட்டியில் விளையாடவுள்ளன. ஷஃபாலி வர்மா இந்தப் போட்டியில் பங்கேற்பதுதான் டி20 உலகக் கோப்பைக்கான நல்ல பயிற்சியாக அமையும். அதற்குப் பதிலாக யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இருவரையும் விளையாட வைப்பது பின்னால் செல்வதற்குச் சமம் என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன. 

Tags : Shafali Verma
ADVERTISEMENT
ADVERTISEMENT