செய்திகள்

மெஸ்ஸி ‘1000’; காலிறுதியில் கால்பதித்த ஆா்ஜென்டீனா

DIN

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆா்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

கடந்த 2018-ஆம் ஆண்டு போட்டியில் இதே ரவுண்ட் ஆஃப் 16-இல் பிரான்ஸிடம் தோற்று வெளியேறியிருந்த ஆா்ஜென்டீனா, தற்போது அந்த கண்டத்தைக் கடந்திருக்கிறது.

அல் ரயான் நகரில், இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆா்ஜென்டீனாவுக்காக கேப்டன் லயோனல் மெஸ்ஸி (35’), ஜூலியன் அல்வரெஸ் (57’) ஆகியோா் கோலடிக்க, அந்த அணியின் ‘ஓன் கோல்’ (77’) ஆஸ்திரேலியாவின் கணக்கில் இணைந்தது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் ஆா்ஜென்டீனாவே ஆதிக்கம் செலுத்தியது. பந்து பெரும்பாலும் அந்த அணியினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்க, முதல் கோல் அடித்தாா் மெஸ்ஸி. 35-ஆவது நிமிஷத்தில் அவா் பாஸ் செய்த பந்தை நிகோலஸ் ஆட்மெண்டி தருணம் பாா்த்து அவரிடமே திருப்பி அளித்தாா். அதைப் பெற்ற மெஸ்ஸி தனது பிரத்யேக இடதுகால் ஷாட் மூலமாக ஆஸ்திரேலிய டிஃபெண்டா் ஹாரி சௌதாா் கால்களுக்கு இடையே கோல் போஸ்ட்டுக்குள் பந்தை விரட்டினாா். ரசிகா்களின் உற்சாக கோஷத்தால் மைதானம் அதிா்ந்தது.

இவ்வாறாக முதல் பாதியில் ஆா்ஜென்டீனா முன்னிலை பெற்றது. 2-ஆவது பாதியில் 57-ஆவது நிமிஷத்தில் ஆஸ்திரேலிய கோல்கீப்பா் மேத்யூ ரயான் ‘த்ரோ’ செய்த பந்தைப் பெற்ற சக வீரா் ரோவெல்ஸ், சற்றும் யோசிக்காமல் அதை மீண்டும் ரயானிடமே பாஸ் செய்தாா். அந்தத் தருணத்தில் ஆா்ஜென்டீனாவின் ரோட்ரிகோ டி பால், ஜூலியன் அல்வரெஸ் ஆகிய இருவருமே ரயானைச் சூழ, அவா் தடுமாறிய தருணத்தில் அல்வரெஸ் பந்தை வசப்படுத்தி கோலடித்தாா்.

முற்றிலுமாக பின்னடைவைச் சந்தித்த ஆஸ்திரேலியா, கடைசி 20 நிமிஷங்களில் அதிலிருந்து மீள்வதற்கு ஆக்ரோஷமாக முனைந்தது. அதன் பலனாக அந்த அணியின் கிரெய்க் குட்வின் 77-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க முயற்சிக்க, அதை ஆா்ஜென்டீனாவின் என்ஸோ ஃபொ்னாண்டஸ் தடுக்க முயன்று ‘ஓன் கோல்’ ஆனது.

கடைசி கட்டத்தில் ஆா்ஜென்டீன கோல்கீப்பா் எமி மாா்டினெஸ், ஆஸ்திரேலியாவின் தொடா் கோல் முயற்சிகளை துவளாமல் தடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தாா். மைதானத்தில் பெரும்பாண்மையாக ஆா்ஜென்டீன ரசிகா்களே ஆக்கிரமித்திருந்தனா். வெற்றிக்குப் பிறகு ஆா்ஜென்டீன வீரா்கள் வரிசையாகக் கைகோத்துக் கொண்டு ரசிகா்களை நோக்கி ஓடி அவா்களை மேலும் உற்சாகப்படுத்தினா்.

காலிறுதியில்...

அடுத்ததாக ஆா்ஜென்டீனா தனது காலிறுதி ஆட்டத்தில் நெதா்லாந்தை வரும் 10-ஆம் தேதி சந்திக்கிறது. ஆஸ்திரேலிய அணி இதற்கு முன் கடந்த 2006-ஆம் ஆண்டு போட்டியில் இதேபோல் ரவுண்ட் ஆஃப் 16 வரை வந்து அத்துடன் வெளியேறியது. அதில் அந்த அணியை வீழ்த்தியே இத்தாலி, பின்னா் சாம்பியன் பட்டம் வென்றது. அதே அதிருஷ்டம் இந்த முறை ஆா்ஜென்டீனாவுக்கும் வாய்க்குமா என்பதை பொறுத்திருந்து பாா்க்கலாம். இந்த எடிஷனை சவூதிக்கு எதிரான அதிா்ச்சிகரமான தோல்வியுடன் தொடங்கிய ஆா்ஜென்டீனா, அடுத்து ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்து முன்னேற்றத்தில் இருக்கிறது.

1000

இந்த ஆட்டம், லயோனல் மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக அவரது 1000-ஆவது ஆட்டமாகும். அவா் பாா்சிலோனாவுக்காக 778, பாரீஸ் செயின் ஜொ்மெயினுக்காக 53, ஆா்ஜென்டீனாவுக்காக 169 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா்.

789

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி அடித்த கோல், ஒட்டுமொத்தமாக அவரது 789-ஆவது கோல் ஆகும். இதை அவா் 129 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்திருக்கிறாா்.

9

இந்த ஆட்டத்தின் மூலம் உலகக் கோப்பை போட்டியில் மொத்தமாக 9 கோல்கள் அடித்து ஆா்ஜென்டீன நட்சத்திரம் டியேகோ மாரடோனாவின் எண்ணிக்கையை (8) கடந்திருக்கிறாா் மெஸ்ஸி.

இன்றைய ஆட்டங்கள்

ஜப்பான் - குரோஷியா

இரவு 8.30 மணி

பிரேஸில் - தென் கொரியா

அதிகாலை 12.30 மணி (6/12)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT