செய்திகள்

யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் கேப்டனாகப் பிரபல வீராங்கனை நியமனம்

5th Dec 2022 01:34 PM

ADVERTISEMENT

 

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணிக்குப் பிரபல வீராங்கனை ஷஃபாலி வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிருக்கான யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டி முதல்முறையாக அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஜனவரி 14 முதல் ஜனவரி 29 நடைபெறவுள்ள இப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு இந்திய யு-19 மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவில் அந்நாட்டுக்கு எதிராக 5 டி20 ஆட்டங்களில் பங்கேற்கிறது. இத்தொடர் டிசம்பர் 27 முதல் ஜனவரி 4 வரை நடைபெறுகிறது. 

இந்திய யு-19 அணிக்குப் பிரபல வீராங்கனை ஷஃபாலி வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மற்றொரு இந்திய மகளிர் அணி வீராங்கனையான ரிச்சா கோஷும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 10 முதல் தென்னாப்பிரிக்காவில் மகளிர் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால் அதற்காக ஷஃபாலி வர்மாவும் ரிச்சா கோஷும் இந்திய யு-19 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தென்னாப்பிரிக்காவில் ஏற்கெனவே விளையாடிய அனுபவத்துடன் டி20 உலகக் கோப்பையில் இருவரும் பங்கேற்க வேண்டும் என்பதே பிசிசிஐயின் திட்டமாக உள்ளது. 

ADVERTISEMENT

 யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் டி பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் உள்ளன. 

Tags : World Cup
ADVERTISEMENT
ADVERTISEMENT