செய்திகள்

வங்கதேசத்திடம் தோற்ற இந்தியா: ரோஹித் சர்மா சொன்ன விளக்கம்

5th Dec 2022 12:42 PM

ADVERTISEMENT

 

வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் இந்திய அணி விளையாடுகிறது. ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. கே.எல். ராகுலைத் தவிர இதர பேட்டர்கள் சரியாக விளையாடாததால் இந்திய அணி 41.2 ஓவர்களில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கே.எல். ராகுல் 73 ரன்கள் எடுத்தார். ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளையும் எபடாட் ஹுசைன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

வங்கதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் நின்றபோது கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மெஹிதி ஹசன் மிராஸும் முஸ்தாஃபிசுர் ரஹ்மானும் 51 ரன்கள் சேர்த்து பரபரப்பான முறையில் தங்கள் அணியை வெற்றி பெற வைத்தார்கள். வங்கதேச அணி, 46 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் லிட்டன் தாஸ் 41 ரன்கள் எடுத்தார். 

ஆட்டம் முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தோல்விக்கான காரணம் பற்றி கூறியதாவது:

ADVERTISEMENT

இந்த ஆட்டத்தில் நூலிழையில் தோற்றுள்ளோம். நன்றாக மீண்டு வந்தோம். நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. 186 என்பது நல்ல ஸ்கோர் கிடையாது. ஆனாலும் நாங்கள் நன்றாகப் பந்துவீசினோம். கடைசியில் அவர்கள் நெருக்கடியைச் சரியாக எதிர்கொண்டார்கள். கடைசியில் நன்றாகப் பந்துவீசியிருக்க வேண்டும் என்றாலும் இந்த ஆட்டத்தில் எங்களுடைய பந்துவீச்சு 40 ஓவர்களுக்கு நன்றாக இருந்தது. நிறைய விக்கெட்டுகளையும் எடுத்தோம். நிறைய ரன்கள் எங்களிடம் இல்லை. கூடுதலாக 25-30 ரன்கள் இருந்திருந்தால் உதவியாக இருந்திருக்கும். 25-வது ஓவரின்போது நாங்கள் 240-250 ரன்கள் எடுப்போம் என நினைத்தோம். ஆனால் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தால் அந்த ஸ்கோரை எடுப்பது கடினமாகிவிடும். இதுபோன்ற ஆடுகளங்களில் எப்படி விளையாட வேண்டும் எனக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆடுகளங்களுக்கு நாங்கள் பழக்கப்பட்டு உள்ளதால் எவ்வித மன்னிப்பும் கிடையாது. எங்கள் அணி வீரர்கள் இந்த ஆட்டத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன் என்றார்.

Tags : Rohit Sharma
ADVERTISEMENT
ADVERTISEMENT