செய்திகள்

உலகக் கோப்பை: பெரிய அணிகள் தடம் புரண்டது எப்படி?

3rd Dec 2022 02:02 PM | எழில்

ADVERTISEMENT

 

2022 கால்பந்து உலகக் கோப்பையில் ஜெர்மனி, பெல்ஜியம், உருகுவே, டென்மார்க் போன்ற பெரிய அணிகள் எல்லாம் மூன்றே ஆட்டங்களுடன் போட்டியிலிருந்து வெளியேறும் என எத்தனை பேர் எண்ணியிருக்க முடியும்?

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட வேண்டிய 16 அணிகளும் முடிவு செய்யப்பட்டுள்ளன. பிரான்ஸ், நெதர்லாந்து, இங்கிலாந்து, போலந்து, ஸ்பெயின், குரோசியா, போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா, மொராக்கோ, செனகல், அர்ஜென்டீனா, பிரேஸில், அமெரிக்கா.

காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெறாத அணிகளின் பட்டியலைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. 4 பெரிய அணிகள் அப்பட்டியலில் இல்லை. 

ADVERTISEMENT

4 முறை உலகக் கோப்பைகளை வென்ற ஜெர்மனி அணியும் நெ.2 அணியான பெல்ஜியமும் ஒரே நாளில் போட்டியிலிருந்து வெளியேறின. 2014-ல் உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி, 2018, 2022 என இரு உலகக் கோப்பைகளிலும் குரூப் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இரு போட்டிகளிலும் ஆறு ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வென்றதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்தமுறை ஒரு ஆட்டத்தில் மட்டும் வென்று கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் அடுத்தச் சுற்று வாய்ப்பை ஸ்பெயினிடம் இழந்தது. குரூப் ஈ பிரிவில் ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி ஜப்பானும் ஸ்பெயினும் முன்னேறியுள்ளன. 

தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள பெல்ஜியம் அணி குரோஷியாவை வீழ்த்த முடியாத காரணத்தால் போட்டியிலிருந்து வெளியேறியது. 2014-ல் காலிறுதிக்கு முன்னேறிய பெல்ஜியம் அணி 2018-ல் 3-ம் இடம் பிடித்தது. இந்தமுறை நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. குரூப் எஃப் பிரிவில் மொராக்கோவும் குரோஷியாவும் பெல்ஜியத்தைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளன. 

உருகுவே அணி கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் வெளியேறியுள்ளது. ஒரு கோல் கூடுதலாக அடித்திருந்தால் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும். போர்ச்சுகல் - தென் கொரியா ஆட்டம் டிரா ஆகியிருந்தாலும் வாய்ப்பு கிடைத்திருக்கும். முதல் இரு ஆட்டங்களிலும் ஒரு கோலும் அடிக்காதது கடைசி ஆட்டத்தில் உருகுவே அணியைப் பழி வாங்கிவிட்டது. கடந்த 22 வருடங்களில் முதல்முறையாக குரூப் நிலையிலேயே போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது உருகுவே அணி. குரூப் ஹெச் பிரிவில் போர்ச்சுகலும் தென் கொரியாவும் உருகுவேவைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளன. 

டென்மார்க் அணி கடந்தமுறை காலிறுதிக்கு முன்னேறியது. தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளது. இந்தமுறை இரு ஆட்டங்களில் தோல்வியடைந்து ஒரு வெற்றியும் இன்றி வெளியேறியுள்ளது. குரூப் டி பிரிவில் பிரான்ஸும் ஆஸ்திரேலியாவும் டென்மார்க்கைக் கடைசி இடத்துக்குத் தள்ளி முன்னேறியுள்ளன. 

ஆனால் ஒன்று ஓர் அணியுடன் ஒப்பிட்டால் இந்த அணிகள் பரவாயில்லை. 2006 உள்பட மூன்று முறை உலகக் கோப்பைகளை வென்ற இத்தாலி அணி தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்தாலும் 2018, 2022 உலகக் கோப்பைப் போட்டிகளுக்குத் தகுதி பெறவேயில்லை. 2020 யூரோ கோப்பையை வென்ற இத்தாலி, 2022 உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்றில் வடக்கு மெசிடோனியாவிடம் 0-1 எனத் தோற்றதால் இந்தமுறை வாய்ப்பை இழந்தது. 

பெல்ஜியத்துக்குப் பதிலாக மொராக்கோவும் ஜெர்மனிக்குப் பதிலாக ஜப்பானும் உருகுவேவுக்குப் பதிலாக தென் கொரியாவும் டென்மார்க்குக்குப் பதிலாக ஆஸ்திரேலியாவும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியிருப்பதுதான் 2022 உலகக் கோப்பைப் போட்டியை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. நாக் அவுட்  சுற்றுகளில் இன்னும் என்னென்ன வேடிக்கைகளைக் காணப் போகிறோமோ?

ADVERTISEMENT
ADVERTISEMENT